ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடனும் பாதி பணம் மட்டுமே திருப்பி செலுத்தலாம்! இந்த திட்டம் பற்றி தெரியுமா?
பெண்களுக்கான ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறும் திட்டம் என்ன என்பதையும், அதை பற்றிய விரிவான தகவலையும் பார்க்கலாம்.
வட்டியில்லா கடன் திட்டம்
கிராமத்து பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கத்தில் உத்யோகினி (Udyogini) திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் முக்கியமாக கிராமத்து பெண்கள் கடன் பெற அதிக வாய்ப்புள்ளது.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறலாம். குறிப்பிட்ட 88 வகையான தொழில் செய்யும் பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மத்திய அரசு கடன் உதவி வழங்குகிறது. இவர்களுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி ரூ.3 லட்சம் கடன் வாங்கினால் ரூ.1.50 லட்சம் மட்டும் திருப்பி செலுத்தினால் போதும். அதேபோல வட்டியும் செலுத்த தேவையில்லை.
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் பெண்கள் சிறப்பு பிரிவினராகவோ அல்லது பொது பிரிவினராகவோ இருந்தால் ரூ.3 லட்சம் கடனில் அதிகபட்சமாக 30% மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, ரூ.2.1 லட்சத்தை திருப்பி செலுத்தினால் போதும்.
இந்த திட்டமானது வணிக மற்றும் பொதுத்துறை வங்கிகளால் செயல்படுத்தப்படுகிறது. இதனை விண்ணப்பிக்கும் பெண்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
யாரெல்லாம் தகுதியுடையவர்கள்?
* இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
* மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாக வாழும் பெண்களுக்கு இந்த வருமான வரம்பு இல்லை.
* விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும்.
* இதற்கு முன்பு கடன் வாங்கியிருந்தால் அதனை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும்.
* இதற்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ரேஷன் அட்டை, பிபிஎல் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி பாஸ் புக் நகல் ஆகிய ஆவணங்கள் தேவை.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பெண்கள் அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று உரிய ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். ஒன்லைனில் கூட இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |