இலங்கையில் தமிழைப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்துவதா? இந்தியாவுக்கு பேராபத்து! சீமான் கண்டனம்
இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச்சீட்டிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்துவதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்,இலங்கையின் அலுவல் பணிகளிலும், அரசின் செயல்பாடுகளிலும், நாட்டின் கடவுச்சீட்டிலும் தமிழை முற்றாகப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்தி வரும் சிங்களப் பேரினவாத அரசின் செயல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
இலங்கையின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக சிங்களத்தோடு தமிழும் இருக்கும் நிலையில் தமிழ் மொழியை முழுவதுமாக நிராகரித்து, இனஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கும் இலங்கை அரசின் இனத்துவேசப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழும், தமிழர்களும் ஒதுக்கப்பட்டுப் புறந்தள்ளப்பட்டு வரும் அதேவேளையில், சீனாவின் அதீத ஆதிக்கமும், அதிகப்படியான அத்துமீறலும் இலங்கையில் வெளிப்படையாக நிகழ்ந்தேறுவது இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் பேராபத்தாக முடியும் என்றுரைக்கிறேன்.
காலம் மாறும். ஒருநாள் களம் மாறும். அதிகாரம் எங்கள் கைவரப்பெறும். அன்றைக்கு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாவற்றிற்குமான எதிர்வினையை சிங்களப்பேரினவாதம் உறுதியாக எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன்.
இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச்சீட்டிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்துவதா?https://t.co/yxJyCaLoe4 pic.twitter.com/N8XScwusY6
— சீமான் (@SeemanOfficial) May 25, 2021
இன்றைக்கு எங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வாய்மூடி வேடிக்கைப் பார்க்கும் சர்வதேசச் சமூகம் அன்றைக்கும் இதேபோல அமைதியைக் கடைப்பிடித்து இதேபோன்றதொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன் என நாம் தமிழர் சீமான் தெரிவத்துள்ளார்.