சினிமாவில் யாருக்கெல்லாம் உங்களுடன் தொடர்பு? விசாரணையில் முக்கிய ஆதாரம் குறித்து பேசிய ஆசிரியர் ராஜகோபாலன்
பத்மா சேஷாத்ரி பள்ளி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் ஆசிரியர் ராஜகோபாலனிடம் பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
இதில் மாணவிகளை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியதாக ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கடந்த மாதம் 24ம் திகதி கைது செய்யப்பட்டார்.
இவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் இருந்த ராஜகோபாலன் நேற்று 3 நாள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டார்.
மே 4ம் திகதி மாலை வரை இவரை விசாரிக்க பொலிசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இவர் கடுமையாக விசாரிக்கப்பட்ட நிலையில், இன்றும் காலையில் இருந்து தீவிரமாக விசாரிக்கப்பட்டார்.
அப்போது உங்களுக்கு உதவியாக இருந்த ஆசிரியர்கள் யார்? சினிமாவில் நடிக்க வைப்பேன் என்று கூறியதால், சினிமாவில் யாருக்கெல்லாம் உங்களுடன் தொடர்பு, உங்களை ஏன் பள்ளி நிர்வாகம் காப்பாற்ற பார்க்கிறது என்று பொலிசார் கொக்கி போட்டு விசாரித்துள்ளனர்.
அதோடு ராஜகோபாலனின் வாட்ஸ் ஆப் சாட் , அழிக்கப்பட்ட புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கிய ஆதாரங்கள் எல்லாம் திரட்டப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்களை வைத்து, பள்ளியில் இருக்கும் மற்ற ஆசிரியர்கள் குறித்து பொலிசார் கேள்வி எழுப்பி உள்ளனர்.
விசாரணையில் முக்கிய ஆதாரங்களை குறித்து ராஜகோபாலன் தகவல்களை வெளியிட்டதாக கூறப்படும் நிலையில் முக்கிய வாக்குமூலம் ஒன்றை அவர் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.