ஷுப்மன் கில், பெகுர்சன் வெறித்தனம்! டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் 2-வது வெற்றி
Ragavan
in கிரிக்கெட்Report this article
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 15-வது சீசனில் 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டியிட்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து குஜராத் அணியின் தொடக்க வீரராக அவுஸ்திரேலிய வீரர் மேத்தீவ் வெடும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மேத்தீவ் வெட் விக்கெட்டை ரஹிம் வீழ்த்தினார்.
இதன் பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கரும் தொடர்ந்து 2வது முறையாக ரசிகர்களை ஏமாற்றினார். இதன் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், ஷுப்மன் கில்லும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிவிருந்து மீட்டனர்.
இருவரும் அதிரடியாக விளையாட குஜராத் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். டேவிட் மில்லர் 20 ஓட்டங்கள் , ராகுல் திவாட்டியா 14 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த சுப்மான் கில் 46 பந்துகளில் 84 ஓட்டங்கள் விளாசினார். இதனால் குஜராத் அணி 171 ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி தடுமாற்றம் இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. டிம் செஃபர்ட் 3 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பிரித்வி ஷா 10 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மந்தீப் சிங் 18 ஓட்டங்களில் பெவிலியன் திரும்ப டெல்லி அணி முதல் போட்டியில் போல் தடுமாறியது.
அதனைத் தொடர்ந்து பொறுப்புடன் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 29 பந்துகளில் 43 ஓட்டங்கள் விளாச,லலித் யாதவ் 25 ஓட்டங்கள் சேர்த்தார். அதிரடி வீரர் பொவேலும் சோபிக்க தவற, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 157 ஓட்டங்களுக்கு 9 விக்கெட் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. பெகுர்சன் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் ஷுப்மன் கில், பெகுர்சன் வெறித்தனமாக விளையாடினர், கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக அணியை வழிநடத்தினார். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி தொடரின் 2-வது வெற்றியை பெற்றது.