பரபரப்பான சூப்பர் ஓவர் ஆட்டம்: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்கள் குவித்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 34 ஓட்டங்களும், ராகுல் 38 ஓட்டங்களும், அபிஷேக் போரெல் 49 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சமனில் முடிந்த மோதல்
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான பதிலடி கொடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் நித்திஷ் ராணா இருவரும் தலா 51 ஓட்டங்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
துருவ் ஜுரேல் 26 ஓட்டங்களும், ஹெட்மயர் 15 ஓட்டங்களும் எடுத்தனர்.
வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ஸ்டார்க் அந்த ஓவரில் 8 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதன்மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் திரில் வெற்றி
சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 11 ஓட்டங்கள் எடுத்தது.
12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஓவரில் களமிறங்கிய டெல்லி அணியில் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் களமிறங்கினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் விக்கெட் இழப்பின்றி 2, 4, 1, 6 என 13 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றியை பதிவு செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |