சொந்த மைதானத்தில் வெற்றி கொடி நாட்டிய லக்னோ: போராடி தோற்றது மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ
நடப்பு ஐபிஎல் சீசனின் பரபரப்பான 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்(LSG) அணி, மும்பை இந்தியன்ஸை(MI) எதிர்கொண்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.
குறிப்பாக மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி வெறும் 31 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் மின்னல் வேகத்தில் 60 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் வந்த பூரன் (12) மற்றும் ரிஷப் பந்த் (2) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தாலும், இளம் வீரர் படோனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் சேர்த்தார்.
மறுமுனையில் நிதானமாக ஆடிய எய்டன் மார்க்ரம் இந்த சீசனில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 38 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினார்.
டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி 14 பந்துகளில் 27 ஓட்டங்கள் சேர்க்க, இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்கள் குவித்தது.
லக்னோ அபார வெற்றி
204 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான வில் ஜாக்ஸ் (5) மற்றும் ரிக்கல்டன் (10) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இருப்பினும், அடுத்து களமிறங்கிய நமன்தீப் மற்றும் சூர்யகுமார் ஜோடி அபாரமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர்.
நமன்தீப் 46 ஓட்டங்கள் எடுக்க, சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ஓட்டங்கள் குவித்தார்.
இந்த ஜோடியின் விக்கெட்டுகள் இழந்த பிறகு களத்துக்கு வந்த திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் மிட்சல் சாண்ட்னர் ஆகியோர் பெரிய ஓட்டங்கள் குவிக்க முடியாமல் திணறினர்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலக்கை எட்ட முடியாமல் 191 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் ஷர்துல் தாகூர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான் மற்றும் திக்வேஷ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |