பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த மும்பை இந்தியன்ஸ்: டெல்லி அணி படுதோல்வி
\நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக மும்பை இந்தியன்ஸ் முன்னேறியுள்ளது.
முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன.
மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி
புதன்கிழமை அன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒரு முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. அதே நேரத்தில் டெல்லி அணி தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
காய்ச்சல் காரணமாக அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஃபாஃப் டு பிளெசிஸ் அணியை வழிநடத்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இவரைத் தவிர திலக் வர்மா (27), நமன் தீர் (24), ரிக்கல்டன் (25), மற்றும் வில் ஜேக்ஸ் (21) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.
டெல்லி கேபிடல்ஸ் தோல்வி
181 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது.
மும்பை இந்தியன்ஸின் வலுவான பந்துவீச்சு இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
போல்ட், மிட்செல் சான்ட்னர் (3 விக்கெட்டுகள்), ஜஸ்பிரித் பும்ரா (3 விக்கெட்டுகள்), தீபக் சஹர், வில் ஜேக்ஸ், மற்றும் கரன் சர்மா ஆகியோர் மும்பை தரப்பில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இறுதியில், டெல்லி கேபிடல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வியடைந்தது.
மும்பை இந்தியன்ஸ்: பிளே ஆஃப் பயணம்
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த வெற்றியின் மூலம் 11-வது முறையாக ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள மும்பை அணிக்கு இன்னும் ஒரு லீக் ஆட்டம் மட்டுமே உள்ளது.
அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதன் மூலம் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெற முயற்சிக்கும்.
இதற்கிடையே, குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு தலா இரண்டு லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |