பொது சொத்துக்களுக்கு சேதம்... ஈரானில் அதிரடியாகக் களமிறங்கும் இராணுவம்
விலைவாசி உயர்வுக்கு எதிராக ஈரானிய மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், தற்போது ஆட்சிக்கு எதிராகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் போராட்டமாக வெடித்துள்ளது.
சதித்திட்டங்களை முறியடிக்க
ஈரானில் ஆட்சிக்கு எதிராக பெரும் திரளான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், அந்த மக்களுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

மட்டுமின்றி, ஜனாதிபதி ட்ரம்பும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஈரானிய மக்களுக்கு ஆதரவாக இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையிலேயே சனிக்கிழமையன்று, நாட்டின் முதன்மையான உள்கட்டமைப்பு மற்றும் பொது சொத்துக்களைப் பாதுகாக்க களமிறங்க இருப்பதாக ஈரானிய இராணுவம் கூறியதுடன், எதிரியின் சதித்திட்டங்களை முறியடிக்க ஈரானியர்களையும் வலியுறுத்தியது.
கடந்த பல நாட்களாகத் தொடரும் போராட்டத்தால் ஈரான் மொத்தம் கலவர பூமியாக மாறியுள்ளது. பல பகுதிகளில் கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டும், வாகனங்களை சேதப்படுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரானின் IRGC சிறப்புப்படையும் இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு படைகளும் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியால் கட்டுப்படுத்தப்படுகிறது.
இதனிடையே, இஸ்ரேல் மற்றும் ஈரான் விரோத பயங்கரவாத குழுக்கள் நாட்டின் பொது பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக இராணுவம் குற்றம் சாட்டியது.

இதுவரை 65 பேர்கள்
மேலும், தேசிய நலன்கள், நாட்டின் முதன்மையான உள்கட்டமைப்பு மற்றும் பொது சொத்துக்களை உறுதியாகப் பாதுகாப்பது உறுதி என்றும் ராணுவம் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரித்து வரும் விலைவாசி உயர்விற்கு எதிராக, கடந்த இரண்டு வாரங்களாக ஈரானின் பெரும்பகுதி முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளன. ஆனால் திடீரென்று ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்ததால் அது அரசியல் போராட்டமாக மாறியது.

இதனையடுத்தே, இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தூண்டுதல் என ஈரான் குற்றஞ்சாட்டத் தொடங்கியது. வெளியான தகவலின் அடிப்படையில், இதுவரை 65 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 50 பேர்கள் பொதுமக்கள் எனவும் 15 பேர்கள் பொலிசார் எனவும் தெரிய வந்துள்ளது.
போராட்டங்களை ஒடுக்கும் வகையில், கடந்த இரண்டு வாரங்களில் 2,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு கூட்டு அறிக்கையில்,
போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், ஈரானிய அதிகாரிகள் வன்முறையைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |