ஈரானில் கொல்லப்பட்ட கனேடியர்... வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் கண்டும் கண்டனம்
ஈரானில் நாடு தழுவிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், கனேடியக் குடிமகன் ஒருவர் ஈரானிய அதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ளார் என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வர வேண்டும்
தூதரக அதிகாரிகள் கனடாவில் உள்ள பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர், இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கல்களை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஆனந்த் தமது சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

ஈரான் அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களுக்கு மத்தியில், தங்கள் குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்று கோரி ஈரானிய மக்கள் நடத்திய அமைதியான போராட்டங்கள், அந்த அரசாங்கத்தால் அப்பட்டமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தொடர்ச்சியான விரோதப் போக்கு முடிவுக்கு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர். போராட்டக்காரர்களை நடத்திய விதம் குறித்து ஈரான் அரசாங்கத்தைக் கண்டித்துள்ளதுடன், ஈரானிய அரசாங்கத்தின் வன்முறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
I have just learned that a Canadian citizen has died in Iran at the hands of the Iranian authorities. Our consular officials are in contact with the victim’s family in Canada and my deepest condolences are with them at this time. Peaceful protests by the Iranian people - asking…
— Anita Anand (@AnitaAnandMP) January 15, 2026
இந்த நிலையில், தனியுரிமைக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவரின் அடையாளம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 நாட்களாக நீடிக்கும் நாடு தழுவிய போராட்டங்கள் மீது ஈரான் அரசாங்கம் மேற்கொண்ட ஒடுக்குமுறையில், 2,500-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர் என்றே அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் இணைய சேவைகள் பெரும்பாலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், இறப்பு எண்ணிக்கை புள்ளிவிவரங்களை சுயாதீனமாக மதிப்பிட முடியவில்லை என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் செவ்வாயன்று செய்தி வெளியிட்டது.
மட்டுமின்றி, ஈரானிய அரசாங்கம் இறப்புகள் குறித்த உத்தியோகப்பூர்வமான எண்ணிக்கையை வெளியிடவில்லை. சமீபத்திய பல வருடங்களில் ஈரானில் நடந்த மற்ற போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிடும்போது, அறிவிக்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை இதுவரையில் மிக அதிகமாகும்.

மட்டுமின்றி, சமீபத்திய வன்முறைச் சம்பவங்கள், தற்போதைய ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த 1979 இஸ்லாமியப் புரட்சியை நினைவூட்டுவதாகவே கூறப்படுகிறது.
வெளியேற வேண்டும்
ஈரானில் போராட்டக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதை கனடா கடுமையாகக் கண்டிக்கிறது என்று உலக விவகாரங்கள் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜான் பாப்காக் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் நிர்வாகம் தங்கள் சொந்த மக்களைத் துன்புறுத்துவதை நிறுத்துமாறும், வன்முறை, தன்னிச்சையான கைதுகள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட அடக்குமுறைகளைக் கைவிடுமாறும் கனேடிய நிர்வாகம் ஈரான் அதிகாரிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவாதகவும், ஈரானில் உள்ள கனேடியர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியுமானால், உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஜான் பாப்காக் குறிப்பிட்டுள்ளார்.

பல வணிக விமான நிறுவனங்கள் ஈரானிற்கு உள்ளேயும் வெளியேயும் விமான சேவைகளை நிறுத்திவிட்டாலும், ஆர்மீனியா மற்றும் துருக்கியுடனான நில எல்லைகள் திறந்தே உள்ளன, மேலும் கனேடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இந்த இரு நாட்டிற்கும் நுழைய விசா தேவையில்லை என்றே கனடாவின் உலக விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, புதன்கிழமை நிலவரப்படி, மொத்தம் 3,054 கனேடிய குடிமக்களும் நிரந்தர வசிப்பாளர்களும் ஈரானில் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |