போரை முடிவுக்குக் கொண்டுவர 300 பில்லியன் டொலர் கோரும் ஈரான்: கோபத்தில் ட்ரம்ப்
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து துவங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் 300 பில்லியன் டொலர்கள் கோரியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்களால் கசிய விடப்பட்ட தகவல் டொனால்ட் ட்ரம்பை கோபம் கொள்ள வைத்துள்ளது.
கட்டுப்பாடு ஈரான் வசம்
குறித்த தகவலால் கடும் கோபமடைந்த டொனால்ட் ட்ரம்ப், அந்த முன்மொழிவை பலவீனமானது மற்றும் பரிதாபகரமானது என்று நிராகரித்ததோடு, ஈரான் நிர்வாகத்தை திருந்தி செயல்படுமாறும் எச்சரித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்த வார இறுதியிலேயே ஜெனீவாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையிலேயே, ஈரானின் இந்த நிபந்தனை தொடர்பான தகவல் கசிந்துள்ளது.
ஈரானால் தயாரிக்கப்பட்டு அந்நாட்டு அரசு ஊடகங்களால் கசியவிடப்பட்ட 14 அம்ச ஒப்பந்தத்தில், நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக அமெரிக்கா 300 பில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் என்றும், இந்தப் போரானது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் துவங்கப்பட்டுள்ளது என்றும் ஈரான் விளக்கமளித்துள்ளது.
மேலும், ஹார்முஸ் நீரிணை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும், ஆனால் முழு கட்டுப்பாடும் ஈரான் வசமிருக்கும் என்றும் அந்த அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா மேற்கொண்டு வரும் ஒப்பந்தத்திற்கும் அந்த 14 அம்சத் திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ட்ரம்ப் வலியுறுத்திக் கூறியுள்ளார். தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,
ஈரான் போலிச் செய்தி நிறுவனங்களுக்குக் கசியவிட்ட நிபந்தனைகளுக்கும், எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒப்பந்தம் குறித்து அவர்கள் வெளியிட்ட பலவீனமான மற்றும் பரிதாபகரமான அறிக்கை உட்பட, அவர்கள் கூறிய எதற்கும் உண்மையில் எந்தத் தொடர்பும் இல்லை.

சிறந்த ஒப்பந்தம் என ட்ரம்ப்
இவர்களுடன் பழகுவது மிகவும் நேர்மையற்ற செயல். அவர்களிடம் நேர்மையாக நடந்துகொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் ட்ரம்ப் கொந்தளித்துள்ளார்.
ஆனால், ஈரானுடன் ஒரு சிறந்த ஒப்பந்தம் செய்துகொண்டதாக ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்ததன் பின்னரே, ஈரான் செய்தி ஊடகங்களில் அந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் கசிந்தது.

இதனால் ட்ரம்ப் கோபமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டிற்குச் சற்று முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று ஜெனீவாவில் தனது ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
வியாழன் மாலை நிலவரப்படி, ஈரானியத் தரப்பில் உயர்மட்ட அளவில் அந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, ஜெனிவாவில் ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ஈரான் அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |