ஹார்முஸ் நெருக்கடி நடுவே... ஒவ்வொரு நாளும் 139 மில்லியன் டொலர் ஈட்டும் ஈரான்
போர் தொடங்கியதிலிருந்து, எண்ணெய் விற்பனை மூலம் ஈரான் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் கூடுதல் வருமானம் ஈட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருமடங்கு பயன்
ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தக்கூடிய ஒரே முக்கிய ஏற்றுமதியாளராக மாறியதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட உயர்வால் ஈரான் பயனடைந்து வருகிறது.

போர் தொடங்கியதிலிருந்து, விலை மாற்றங்கள் மூலம் ஈரான் இருமடங்கு பயனடைந்து வருகிறது. ஈரானின் முதன்மையான கச்சா எண்ணெய் வகை, பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெயுடன் ஒப்பிடுகையில், கடந்த 10 மாதங்களுக்கும் மேலான காலத்தில் இல்லாத மிகக் குறைந்த தள்ளுபடி விலையில், முக்கியமாக சீனாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பிப்ரவரி 28 ஆம் திகதிக்கு பின்னர், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலருக்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஈரானின் ஏற்றுமதிகள், இம்மாதம் போருக்கு முந்தைய அளவுகளான நாளொன்றுக்கு சுமார் 1.6 மில்லியன் பீப்பாய்களுக்கு நெருக்கமாகவே நீடித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானிய கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் கார்க் தீவு முனையத்தில் தொடர்ந்து ஏற்றப்பட்டு, ஹார்முஸ் நீரிணை வழியாக பாரசீக வளைகுடாவிலிருந்து வெளியேறி வருகின்றன, சமீபகாலமாக இந்த நடவடிக்கைகள் வேகம் பெற்று வருகின்றன.
ஆனால், மத்திய கிழக்கில் பிற ஏற்றுமதியாளர்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் தினமும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் ஈரானைத் துவம்சம் செய்து வந்தபோதிலும், தனது நிதி ஆதாரங்களை உயிர்ப்புடன் தக்கவைத்துக்கொள்ளும் அந்த நாட்டின் திறனால், எதிரிகளின் இராணுவ முயற்சிகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.

மட்டுமின்றி, போர் நெருக்கடியால் எண்ணெய் விலைகள் மீதான தாக்கத்தைக் குறைக்க அமெரிக்கா, ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரானிய எண்ணெயின் மீதான தடைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம், ஈரான் மேலும் அதிக ஆதாயத்தைப் பெறும் நிலையில் உள்ளது.
எண்ணெயின் மதிப்பு
வெளியான தரவுகளின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் இதுவரை, தனது முதன்மையான ஈரானிய லைட் கச்சா எண்ணெய் கலவை விற்பனை மூலம் ஈரான் நாளொன்றுக்கு சுமார் 139 மில்லியன் டொலர் ஈட்டியிருக்கும்; இது பிப்ரவரி மாதத்தில் ஈட்டிய 115 மில்லியன் டொலரிலிருந்து அதிகரித்த அளவாகும்.
சர்வதேச அளவுகோலான பிரென்ட் எண்ணெயுடன் ஒப்பிடுகையில் ஈரானின் எண்ணெயின் மதிப்பு அதிகரித்து, இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு பீப்பாய் 2.10 டொலர் என்ற தள்ளுபடி நிலைக்குக் குறைந்துள்ளது; இது கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும்.

போருக்கு முன்னர் 10 டொலர்கள வரையில் தள்ளுபடி அளிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ள ஈரானுக்கு, ஒவ்வொரு பீப்பாய்க்கும் கிடைக்கும் உயர்ந்த விற்பனை விலை மிக முக்கியமானது; தனது சீர்குலைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் வலுப்படுத்தவும் அந்நாடு கணிசமான முதலீடுகளைச் செய்ய வேண்டியுள்ளது.
மத்திய கிழக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பதிலடித் தாக்குதல்களில், அந்நாடு பெருமளவிலான ஆயுதங்களைச் செலவிட்டுள்ளது; அவற்றை மீண்டும் ஈடுசெய்ய வேண்டியிருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |