அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பரிசளித்த ஈரான்... ட்ரம்ப் சொன்ன தகவல்
ஈரான், அமெரிக்காவிற்கு எரிசக்தி தொடர்பான ஒரு பெரிய சலுகையை வழங்கியுள்ளது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று கூறியுள்ளார்.
மிகப் பெரிய பரிசு
இது ஒரு நேர்மறையான முன்னேற்றம் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அதன் விவரங்களை வழக்கம் போலவே வெளியிடவில்லை. ஈரான் அளித்துள்ள அந்தப் பரிசு ஹார்முஸ் நீரிணைத் தொடர்புடையது என மட்டும் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அதன் பின்னணி தொடர்பில் விளக்க மறுத்துவிட்டார்.

உலக நாடுகளின் கடும் அழுத்தம் காரணமாக ஹார்முஸ் நீரிணையை தொடர்ந்து இயங்க வைக்க ட்ரம்ப் மிகத் தீவிரமாகப் போராடி வருகிறார். ஆனால், ஹார்முஸ் நீரிணை முடக்கப்படவில்லை என்றும், எதிரிகளுக்கு மட்டும் கப்பல் போக்குவரத்திற்கு வாய்ப்பில்லை என்றும் ஈரான் கூறி வருகிறது.
இதனால், வளைகுடா நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சில ஆசிய நாடுகளும் கடும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. மேலும், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டுள்ளதாக வெளியான வதந்தியை அடுத்து, பிரித்தானியா கண்ணிவெடிகளை கண்டறியும் ட்ரோன்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.
பிப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியதன் பின்னர் இதுவரை சுமார் 100 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளது. கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டிருந்தால் போக்குவரத்து மொத்தமாக ஸ்தம்பித்திருக்கும்.
இதனிடையே, ஹார்முஸ் நீரிணைப் பகுதிக்கு சிறப்பு இராணுவத்தையும் அமெரிக்கா அனுப்பியுள்ளது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் நிர்வாகம் எங்களுக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள், அந்தப் பரிசு இன்று வந்து சேர்ந்தது. அது மிகப் பெரிய பரிசு, அதன் மதிப்பு மிக அதிகம் என்ரார்.

அது அணுசக்தி சம்பந்தப்பட்டதல்ல, எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்டது, மேலும் அவர்கள் செய்தது ஒரு மிக நல்ல விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சரியான நபர்களுடன்
ஈரான் மீதான போர் தொடங்கிய இரண்டாவது நாளே, அமெரிக்கா ஏற்கனவே போரை வென்றுள்ளது. ஆனால், எங்கள் இலக்குகளை எட்டும் வரையில் தாக்குதல் தொடரும் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
அதே கருத்தையே ட்ரம்ப் தற்போதும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஏற்கனவே போரில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அந்தப் போர் நடவடிக்கை இவ்வளவு விரைவாக முடிவடைந்தது குறித்து பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஏமாற்றமடைந்துள்ளார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீதான போரை முடிவுக்கு வருவதை பீட் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மேலதிக தகவல் எதையும் வெளியிடவில்லை.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக ஈரானில் உள்ள சரியான நபர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஈரானியர்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மிகவும் விரும்புவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால் யார் யார் அந்த சரியான நபர்கள் என்பதையும் ட்ரம்ப் குறிப்பிட மறுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |