ட்ரம்ப் கூறிய ஒப்பந்தம்... ஒப்புதல் அளிக்கவில்லை என மறுக்கும் ஈரான்
ஈரான் மீதான இரண்டாவது நாள் தாக்குதலைக் கைவிட்ட டொனால்ட் ட்ரம்ப், அந்த நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுப்பதில் ஒப்புதல் பெற்றதாக அறிவித்திருந்தார்.
ஒப்புதல் அளிக்கவில்லை
தற்போது, அப்படியான ஒப்பந்தம் எதுவும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என ஈரான் மறுத்துள்ளது. ஈரானின் ஃபார்ஸ் செய்தி முகமை வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்காவுடனான ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான எந்தவொரு உரைக்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றும், இதை ஈரானின் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கும் குழுவினரே உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாகவும், ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த ட்ரம்ப், ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் ஈரானின் உயர்மட்டத் தலைமை வரை கொண்டு செல்லப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு, தாம் இன்று மாலை ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் ரத்து செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ட்ரம்ப் குறிப்பிட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து கருத்தேதும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், அமெரிக்க ஜனாதிபதி கடந்த காலங்களிலும் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டும் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்று கூறி, ட்ரம்பின் அறிவிப்பை ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் நிராகரித்தது.

முந்தைய செய்திகளாகவே
சாத்தியமான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஈரான் அறிவிக்கும் வரை, இவ்விடயம் தொடர்பாக ட்ரம்ப் வெளியிடும் எந்தவொரு செய்தியும், அவருடைய முந்தைய செய்திகளாகவே கருதப்பட வேண்டும் என தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28- அன்று தொடங்கி மத்திய கிழக்குப் பகுதி முழுவதையும் ஆட்கொண்ட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளைத் தெஹ்ரானும் வாஷிங்டனும் தொடர்ந்து பரிமாறிக்கொண்டு வருகின்றன.

ஏப்ரல் 8 முதல் ஒரு பலவீனமான போர்நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், சமீப நாட்களாக இரு தரப்பினரிடையே தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது, மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |