ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் விபத்துக்கு காரணம்... விசாரணையில் தெரியவந்த உண்மை
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராகிம் ரைசியின் மரணத்திற்கு காரணமான ஹெலிகொப்டர் விபத்து மோசமான வானிலையால் ஏற்பட்டதாக இறுதி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சிக்கலான காலநிலை
63 வயதான ரைசி மற்றும் அவரது பரிவாரங்களுடன் ஹெலிகொப்டர் வடக்கு ஈரானில் பனி மூடிய மலைப்பகுதியில் இறங்கியது. இதில் ஜனாதிபதி ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உட்பட 7 பேர்கள் பலியானார்கள்.
இதனால் நாடு ஜனாதிபதி தேர்தலை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஹெலிகொப்டர் விபத்துக்கான முக்கிய காரணம் பிராந்தியத்தின் சிக்கலான காலநிலை என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அடர்த்தியான மற்றும் அதிகமான மூடுபனி காரணமாக மலையில் ஹெலிகொப்டர் மோதியது என்றும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் நாசவேலைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.
பயணிகள் இருவர்
மே மாதம் விபத்திற்கு பின்னர் விசாரணை முன்னெடுத்த ராணுவமும் சதி இருப்பதாக தெரியவில்லை என்றே குறிப்பிட்டிருந்தது. ஆனால் கடந்த மாதம் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலில்,
மோசமான வானிலை ஒரு காரணம் என்றாலும், கூடுதலாக பயணிகள் இருவர் ஹெலிகொப்டரில் பயணம் செய்துள்ளதும் விபத்துக்கு காரணம் என்றும், அதனாலையே ஹிகொப்டர் தடுமாறியதாகவும் குறிப்பிட்டிருந்தது. அதிகாரிகள் தரப்பு இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |