போர் நிறுத்த பேச்சுவார்த்தை: அமெரிக்கா வெளியிட்ட தகவல் வதந்தி என ஈரான் மறுப்பு
அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை என்பது வதந்தி என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஆர்வம்
ஈரானுக்கு எதிரான போர் தாக்குதலில் அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதே நேரத்தில், இரு தரப்பிற்கும் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன.
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மிக முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை எட்ட மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இரு தரப்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாக தீவிரமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் டிரம்ப் அதில் குறிப்பிட்டார்.
அதே போல இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் முன்னதாக வெளியிட்ட தகவல் ஒன்றில், அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையை ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முன்னின்று நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.
ஈரான் மறுப்பு
இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான அனைத்து செய்திகளையும் ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களுக்கு ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சந்தித்து வரும் சிக்கலான சூழ்நிலையை சமாளிக்கவும், உலகச் சந்தையை கையாளவும் இது போன்ற போலியான செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதே நேரத்தில், ஈரானின் நட்பு நாடுகள் மூலமாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருவது உண்மைதான், ஆனால் ஈரான் அதற்கு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |