கடும் புயலில் சிக்கிய 21 இலங்கையர்கள்: ஈரான் கடற்படை எடுத்த அதிரடி முடிவு
கடும் புயலில் சிக்கிய கப்பலில் இருந்து இலங்கை சேர்ந்த 21 கப்பல் பணியாளர்களை ஈரான் பத்திரமாக மீட்டுள்ளது.
கடும் புயலில் கவிழ்ந்த கப்பல்
ஓமன் வளைகுடாவில் கடும் புயலில் சிக்கிய கப்பலில் இருந்து 21 இலங்கை கப்பல் பணியாளர்களை ஈரான் அவசரகால சேவைகள் புதன்கிழமை அன்று மீட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Cook தீவுகள் கொடியைக்(Cook Islands-flagged) கொண்ட எண்ணெய் கப்பல், ஈரானின் தென்பகுதியில் உள்ள ஜாஸ்க் என்ற துறைமுக நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் கடும் புயலில் சிக்கி சேதமடைந்து மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதையடுத்து, உதவிக்கான அவசர அழைப்பு விடுக்கப்பட்டதுடன், உடனடியாக நடவடிக்கை எடுத்த ஈரான் அதிகாரிகள், மீட்பு கப்பலை சம்பவ இடத்திற்கு அனுப்பினர்.
21 இலங்கை கப்பல் பணியாளர்கள் மீட்பு
ஜாஸ்க் துறைமுகங்கள் மற்றும் கடல் நிர்வாக இயக்குநர் முகமது அமீன் அமானி(Mohammad Amin Amani) இலங்கை சேர்ந்த 21 கப்பல் பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.
மேலும், மீட்பு நடவடிக்கையில் ஐந்து கப்பல் பணியாளர்களுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டது என்றும், ஜாஸ்க் அவசரகால சேவைகள் அவர்களுக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவர் கூறினார்.
அதிர்ஷ்டவசமாக, அனைத்து கப்பல் பணியாளர்களும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |