பந்தர் அப்பாஸ் நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்: அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி!
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்க படைத்தளம் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்
ஈரான் நாட்டின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள இராணுவ தளம் மீது நேற்று அதிகாலை வான்வழித் தாக்குதலை அமெரிக்க ராணுவம் நடத்தியது.
அமெரிக்காவின் தாக்குதலில் பந்தர் அப்பாஸ் நகரில் அமைந்துள்ள ஈரானின் தரைக்கட்டுப்பாடு மையம் தான் முதன்மை இலக்காக இருந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தகவல் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் இந்த தாக்குதலில் ஈரான் 4 தாக்குதல் ட்ரோன்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி
இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் இராணுவ தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் எங்கு நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல்கள் ஈரான் வழங்கவில்லை என்றாலும், குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவம் தளம் மீது நடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

அத்துடன் அமெரிக்கா மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அதை விட மிகப்பெரிய பதிலடி தாக்குதல் அமெரிக்காவுக்கு கொடுக்கப்படும் என்று இதன் மூலம் ஈரான் எச்சரித்துள்ளது.
போர் நிறுத்தத்தை அமெரிக்கா மீறியதாக குற்றம் சாட்டும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற 4 அமெரிக்க தொடர்புடைய கப்பல்களை எச்சரித்து ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது.