37 ஆண்டுகால வழக்கத்தை கைவிட்ட ஈரான் உச்ச தலைவர் கமேனி: அமெரிக்கா அச்சுறுத்தல் காரணமா?
அமெரிக்காவின் அச்சுறுத்தலை தொடர்ந்து 37 ஆண்டுகால நடைமுறையை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கைவிட்டுள்ளார்.
கைவிடப்பட்ட 37 ஆண்டுகால நடைமுறை
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 8ம் திகதி நாட்டின் விமானப்படை தளபதிகளுடன் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சந்தித்து ஆலோசனை நடத்தும் நிலையில், தற்போது இந்த வருடாந்திர சந்திப்பை கமேனி தவிர்த்துள்ளார்.
ஈரானின் உச்சத் தலைவராக அயதுல்லா அலி கமேனி பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் விமானப் படை தளபதிகள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு வந்துள்ளார்.

கோவிட் தொற்று வேகமாக பரவி வந்த காலகட்டத்தில் கூட இந்த மரபை அயதுல்லா அலி கமேனி மீறவில்லை. ஆனால் 37 ஆண்டுகளில் முதல் முறையாக கமேனி இந்த சந்திப்பை தற்போது புறக்கணித்துள்ளார்.
உச்சத் தலைவர் கமேனிக்கு பதிலாக அந்நாட்டின் ஆயுதப்படை தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மெளசவி இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
இது தொடர்பாக ஈரான் அரசாங்கம் எந்தவொரு அதிகாரப்பூர்வ காரணத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
இருப்பினும் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள தீவிர மோதல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உச்சத் தலைவர் கமேனி இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

ஆனால் மற்றொரு தரப்பினர், உச்சத் தலைவருக்கு 86 வயதாகிறது, இதனால் அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதில்லை, அதன் காரணமாக அவர் ஆலோசனை கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம் என்று தெரிவித்து வருகின்றனர்.
விசுவாசப் பிரமாணம்
ஈரானில் முன்பு இருந்த மன்னராட்சியை அகற்றுவதற்காக 1979ம் ஆண்டு பிப்ரவரி 8ம் திகதி ரூஹோல்லோ கோமேனிக்கு விசுவாசமாக இருப்பதாக விமானப்படை அதிகாரிகள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 8ம் திகதி விமானப்படை அதிகாரிகளுடன் ஈரான் உச்ச தலைவர் கமேனி ஆலோசனை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |