ரஷ்யாவுடன் கைகோர்க்கும் ஈரான்: மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான புதிய ஒப்பந்தம்
ரஷ்யாவிற்கு சுமார் 3 பில்லியன் மதிப்புள்ள கட்டுமானப் பொருள்களை ஈரான் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருப்பதாக அந்த நாட்டின் பொருளாதார இராஜதந்திரத்திற்கான துணை வெளியுறவு அமைச்சர் மஹ்தி சஃபாரி சனிக்கிழமை தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கும் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே புதிய வணிக உறவுகள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், ரஷ்யாவிற்கு 3 பில்லியன் மதிப்பிலான கட்டுமான பொருள்களை ஈரான் அரசு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் வலியுறுத்திய கருத்தில், ஈரானில் சிமெண்ட் போன்ற கட்டுமான பொருள்களை உற்பத்தி செய்யும் சிறப்பான மாகாணங்கள் இருப்பதால் அவற்றை ஏற்றுமதிக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் வடகிழக்கு ஈரானிய மாகாணமான வடக்கு கொராசான் இந்த ஏற்றுமதி வணிகத்தில் அதிக நன்மைகளை எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
காஸ்பியன் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, மாஸ்கோவுடனான இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்புவதாகவும், மேற்கத்திய நிதி பரிமாற்ற அமைப்பிலிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: பாம்பு தீவில் ரஷ்ய போர் விமானம் தாக்குதல்: பரபரப்பு வீடியோ
இதற்கு சிறிது காலத்திற்கு முன்னதாக ஈரான் பிரிக்ஸ் அமைப்பில் சேர விரும்பும் கோரிக்கையையும் உறுதிபடுத்தி இருந்தது குறிப்பிடதக்கது.