ஈரான் தாக்குதலால் மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு ரூ 7520 கோடி இழப்பு
மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதலில், முதல் இரண்டு வாரத்தில் மட்டும் 800 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதிலடித் தாக்குதல்
ஈரான் மீதான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது முதல் இரண்டு வாரங்களில் அமெரிக்க தளங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களின் மதிப்பு வெளியாகியுள்ளது.

அது 800 மில்லியன் டொலர் அல்லது இந்திய மதிப்பில் ரூ 7520 கோடி என்றே கூறுகின்றனர். பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து வந்த வாரத்தில், ஈரான் மேற்கொண்ட பதிலடித் தாக்குதல்களாலேயே இந்தச் சேதத்தில் பெரும்பகுதி ஏற்பட்டது என உறுதி செய்துள்ளனர்.
இருப்பினும், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் முழு அளவும் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், இப்பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்துக் குறைவாகவே செய்திகள் வெளியாகியுள்ளன; அச்சேதம் பரவலாக இருப்பதாகத் தோன்றினாலும், கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை அதன் முழுமையான அளவு தெரியவராது என்றே Mark Cancian தெரிவித்துள்ளார்.
ஈரான் இலக்கு
ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகளை ஈரான் இலக்கு வைத்தது.
ஜோர்டானில் அமைக்கப்பட்டிருந்த THAAD அமைப்பு முழுமையாக சேதமடைந்தது. இதன் மதிப்பு 485 மில்லியன் டொலர் என்றே கூறுகின்றனர். மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தினால், அமெரிக்காவிற்கு மதிப்பிடப்பட்ட வகையில் கூடுதலாக 310 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவும் 13 இராணுவ வீரர்களை இழந்துள்ளது. இதனிடையே, போரின் முதல் ஆறு நாட்களுக்கான செலவு 11.3 பில்லியன் டொலர் என, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
CSIS வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், முதல் 12 நாட்களுக்கு 16.5 பில்லியன் டொலர் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |