இந்தக் குற்றங்களுக்குப் பதிலடி உறுதி... பெய்ரூட் மீதான தாக்குதலுக்கு எதிராக ஈரான் சபதம்
பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்காமல் விடாது என்று ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ஞாயிறன்று எச்சரித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹிஸ்புல்லா இலக்குகள்
சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தக் குற்றங்களுக்குப் பதில் அளிக்கப்படாமல் போகாது என்று ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகத்தின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது ஜாஃபர் அசாதி கூறியுள்ளார்.

லெபனானிலிருந்து வடக்கு இஸ்ரேல் மீது ஏவப்பட்ட எறிகணைகளுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறி, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லெபனானின் கோபைரி பகுதி உட்பட தஹியே மாவட்டம் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டன. இந்த நிலையில், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாகவும், தேடுதல், மீட்பு மற்றும் சிதைவுகளை அகற்றும் பணிகள் தொடர்வதாகவும் லெபனான் குடிமைப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
மேலும், 15 பேர் காயமடைந்ததாகவும், அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் கடைகள் கடுமையாக சேதமடைந்ததாகவும் லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கோபேரியில் உள்ள ஒரு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனிடையே, வடக்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை நோக்கி ஹிஸ்புல்லா மூன்று எறிகணைகளை வீசியதாகவும், இந்தச் சம்பவம் அப்பட்டமான போர் நிறுத்த மீறல் என்றும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியப் பகுதிக்குள் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பெய்ரூட்டின் தஹியே பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை (IDF) தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளுக்கு ஹிஸ்புல்லா நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், தெற்கு லெபனானில் செயல்படும் இஸ்ரேலியப் படைகள் மீது ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவியதாக அக்குழு கூறியுள்ளது.
மோதலுக்கு முற்றுப்புள்ளி
இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் துருப்புக்களுக்கு எதிரான தாக்குதல்களை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லாவின் கட்டளை மையம் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் பின்னர் தெரிவித்தது.
இதனிடையே, பல மாத பிராந்திய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான உடன்படிக்கையை எட்டுவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரானின் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த சமீபத்திய பதற்றம் அதிகரித்துள்ளது; இப்பேச்சுவார்த்தைகளில் லெபனான் ஒரு முக்கிய சர்ச்சைக்குரிய விடயமாக உருவெடுத்துள்ளது.

பெய்ரூட் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தவறான நடவடிக்கை என கண்டித்துள்ள ட்ரம்ப், இது தொடர்பில் பதிலடி தாக்குதல் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.
ஆனால், இதுபோன்ற குற்றங்களுக்குப் பதிலடி உறுதி என்றே ஈரான் சபதம் செய்துள்ளது. மத்திய கிழக்கு விவகாரத்தில் ட்ரம்பின் பல நாள் போராட்டம் பலனளிக்குமா அல்லது, தேர்தலை எதிர்கொள்ளும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் கணக்குகள் அவருக்கு கைகொடுக்குமா என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெரியவரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |