ஈரான் போரினால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு: ஸ்பெயின் பிரதமர் எச்சரிக்கை
Iran war hit EU with 100 Billon Euros Spanish PM Warns: ஈரான் போர் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 100 பில்லியன் யூரோக்கள் நிதியிழப்பு ஏற்பட்டு இருப்பதாக ஸ்பெயின் பிரதமர் எச்சரித்துள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் விடுத்த எச்சரிக்கை
பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய கவுன்சில் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்(Pedro Sanchez) ஐரோப்பாவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து வியாழக்கிழமை கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன் ஐரோப்பிய கண்டம் முழுவதும் நிலவும் பொருளாதார மற்றும் வாழ்க்கை செலவின உயர்வுக்கு உக்ரைன் மற்றும் ஈரான் நாடுகளில் நீடித்து வரும் போர் நடவடிக்கைகளே காரணம் என்று குறிப்பிட்டார்.

ஈரான் போர் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு 100 பில்லியன் யூரோக்கள் நிதியிழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த ஆண்டு விவசாய வரவு செலவு திட்டத்திற்கு இணையான அளவை எட்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விண்ணை முட்டும் எரிபொருள் விலை உயர்வு ஐரோப்பிய மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்து இருப்பதுடன், நிறுவனங்கள் இடையிலான வர்த்தக போட்டியிடும் திறனையும் கணிசமாக குறைத்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.