இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை
ஈரான் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ஐரோப்பாவிடம் இன்னும் ஆறு வாரங்களுக்குப் போதுமான விமான எரிபொருள் கையிருப்பு மட்டுமே எஞ்சியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மோசமான சூழ்நிலை
சர்வதேச எரிசக்தி முகமையின் நிர்வாக இயக்குனர் ஃபாத்திஹ் பிரோல் தெரிவிக்கையில், மிக விரைவில் ஐரோப்பா மொத்தம் விமான சேவைகள் ஸ்தம்பிக்கும் நெருக்கடி ஏற்படவிருக்கிறது என்றார்.

வரும் வாரங்களுக்குள் மத்திய கிழக்கிலிருந்து வரும் எண்ணெய் விநியோகம் மீட்டெடுக்கப்படாவிட்டால் மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ள ஃபாத்திஹ் பிரோல், விமான எரிபொருள் பற்றாக்குறையின் விளைவாக, அந்த நகரத்திலிருந்து இந்த நகரத்திற்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை நாம் விரைவில் கேட்போம் என்றார்.
இஸ்ரேலின் போர் வெறி காரணமாக பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது நடந்த முதல் தாக்குதல்களிலிருந்து, உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு கப்பல் நிறுவனங்கள் ஹார்முஸ் நீரிணையில் கடக்க முடியாமல் ஸ்தம்பித்தது.
இந்த நிலையில், அமெரிக்காவும் ஈரானும் கடந்த வாரம் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன, ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வார இறுதியில் தோல்வியடைந்தன.

இருப்பினும், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போருக்கு முந்தைய விலையில் இருந்து பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது 30 சதவீதம் அதிகமாகவே நீடிக்கிறது.
ஆறு வாரங்களுக்கு
மேலும், எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிரடி உயர்வு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போர் குறித்த முடிவுகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், போருக்கு முன்னரே புறப்பட்ட எண்ணெய்க் கப்பல்கள் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு வந்துகொண்டிருந்ததால், விமான எரிபொருளுக்கு முழுமையான தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை.
ஆனால், கடைசி எண்ணெய்க் கப்பல் தற்போது ஐரோப்பாவைச் சென்றடைந்துவிட்டன. இந்த நிலையிலேயே, ஐரோப்பாவிடம் அநேகமாக இன்னும் சுமார் ஆறு வாரங்களுக்குப் போதுமான விமான எரிபொருள் மட்டுமே எஞ்சியிருப்பதாக பிரோல் கூறியுள்ளார்.

இதனிடையே, சர்வதேச ஐரோப்பிய விமான நிலைய கவுன்சில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து ஆணையர்களுக்கு கடந்த வாரம் எழுதிய கடிதத்தில், ஒன்றியத்தில் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளதாகத் தெரிவித்திருந்தது.
ஏற்படவிருக்கும் நெருக்கடியால் பெட்ரோல் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு, மின்சார விலை உயர்வு உள்ளிட்டவையை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அதிக எரிபொருள் விலை காரணமாக இழப்பை ஏற்படுத்தக்கூடிய விமான சேவைகளை சில விமான நிறுவனங்கள் ரத்து செய்து வருவதாகவும், இது ஒரு கட்டத்தில் ஐரோப்பா முழுவதும் வியாபிக்கவும் வாய்ப்புள்ளதாக ஃபாத்திஹ் பிரோல் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |