20 வயது இளைஞர் தலை துண்டித்து ஆணவக்கொலை! வெளியான அதிர்ச்சிகர தகவல்கள்
ஈரானில் 20 வயது இளைஞர் தன்பால் ஈர்ப்பாளர் என குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தென்மேற்கு ஈரானில் உள்ள ஒரு நகரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தவர் 20 வயதான அலி பாசெலி மோன்பரேட் (Ali Fazeli Monfared). இவர் துருக்கியில் உள்ள தமது நெருங்கிய நண்பருடன் வாழும் பொருட்டு, ஈரானிய நிர்வாகத்திடம் கட்டாய இராணுவ சேவையில் இருந்து விலக்கு கோரி விண்ணப்பித்திருந்தார்.
பொதுவாக தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஈரானிய நிர்வாகம் கட்டாய இராணுவ சேவையில் இருந்து விலக்கு அளித்து அவர்களுக்கு உளவியல் பாதிப்பு கொண்டவர்கள் என்ற அடையாள அட்டையும் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் ஈரானிய நிர்வாகத்தால் அலி பாசெலிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த அடையாள அட்டையானது துரதிர்ஷ்டவசமாக குடும்ப உறுப்பினர்களிடம், சிக்கியுள்ளது.
மட்டுமின்றி அலி பாசெலி உடுத்தும் உடைகளும் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக பலர் அவரது தந்தையிடம் முறையிட்டும் வந்துள்ளனர்.
இதனிடையே, அவர் தன்பால் ஈர்ப்பாளர் என ஈரானிய நிர்வாகமும் அடையாளப்படுத்தி இருப்பது பாசெலியின் குடும்பத்தினரை ஆத்திரமூட்ட செய்துள்ளது.
இதனையடுத்து இளைஞர் அலி பாசெலியை வலுக்கட்டாயமாக கிராமப்பகுதிக்கு கொண்டு சென்று மே 4ம் திகதி தலை துண்டித்து படுகொலை செய்துள்ளனர்.
மட்டுமின்றி ஒரே மகனான பாசெலியை படுகொலை செய்துள்ளதை அவரது தாயாரை அழைத்து உறுதியும் செய்துள்ளனர்.
பொலிசார் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மூவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானை பொருத்தமட்டில் தன்பால் ஈர்ப்பாளராக இருப்பது சட்டவிரோதமல்ல, ஆனால் பாலியல் உறவு வைத்துக்கொள்வது குற்றமாகும்.
பாசெலி ஆண் ஒருவருடன் உறவின் போது பிடிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால்,
தற்போது கைதாகியுள்ள மூவருக்கும் மிக குறைவான தண்டனையே கிடைக்கும் என கூறப்படுகிறது.