பொலிசாரால் மார்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மகன்... வீதியில் இறங்கி போராடிய தாயார்: அரசாங்கம் விதித்த கொடூர தண்டனை
ஈரானில் மகனின் இறப்புக்கு நீதி கேட்டு வீதியில் இறங்கி போராடிய தாயார் ஒருவருக்கு 100 கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
2019 இல் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரால் அவரது மகன் மார்பிலேயே சுடப்பட்டார். இந்த விவகாரத்தில் நீதி கேட்டு போராடி வந்துள்ளார் மஹ்பூபே ரமேசானி.
இந்த நிலையில் ஜூலை 11ம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு தெஹ்ரானில் உள்ள பிரபலமான எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 18 வயதேயான தமது மகன் பெஜ்மான் கோலிபூர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு தொடர்ந்து போராடி வந்துள்ளார் மஹ்பூபே ரமேசானி.
இதனால் ஈரானிய நிர்வாகம் அவரை தொடர்ந்து அச்சுறுத்தியும் வந்துள்ளது. மட்டுமின்றி, அரசாங்கத்திற்கு எதிராகவும் பொதுமக்களை அரசாங்கத்திற்கு எதிராக தூண்டும் வகையிலும் நடந்து கொண்டதாக கூறி, சில மாதங்களுக்கு முன்னர் மஹ்பூபே ரமேசானிக்கு 100 கசையடிகள் விதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தண்டனையை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மகன் கொலைக்கு நீதி கேட்டு போராடியதால் அரசாங்கம் அவரை அச்சுறுத்தி வருகிறது என மஹ்பூபே ரமேசானியின் இன்னொரு மகன் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்ததைக் கண்டித்து 2019 நவம்பரில் நடந்த ஒரு வார காலம் நீண்ட போராட்டத்தின் போது குறைந்தது 304 பேர் கொல்லப்பட்டனர். ரமேசானியின் மகன் பெஜ்மானும் போராட்டத்தின் போது கொல்லப்பட்ட போராட்டக்காரர்களில் ஒருவர்.
ஆண்டிஷேவ் பகுதியில் நடந்த போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டார் பெஜ்மான். 2021 நவம்பரில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் திடீரென்று கிராமத்திற்குள் புகுந்த பாதுகாப்புப் படையினர் மஹ்பூபே ரமேசானி மற்றும் பல உறவினர்கள் கைது செய்ததுடன், அவர்களின் மொபைல் போன்களையும் பறித்தனர்.
பின்னர் எச்சரித்து விடுவித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், தமது மகனின் இறப்புக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடி வந்துள்ளார் மஹ்பூபே ரமேசானி.