ஐக்கிய அரபு அமீரகத்தை அடுத்து அமெரிக்க அச்சுறுத்தலுக்குப் பணிந்த ஈராக்
Key Iraqi Airport Bars Iranian Airlines: ஈராக்கின் முக்கிய விமான நிலையம் ஈரானிய விமான நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது.
ஷியா யாத்ரீகர்களின் முக்கிய இடமான ஈராக்கின் நஜாஃப் விமான நிலையம், அமெரிக்கத் தடைகளை அமுல்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை அன்று அனைத்து ஈரானிய விமானங்களையும் நிறுத்தியுள்ளது.
தடை அமுல்
ஈரான் மற்றும் நஜாஃப் விமான நிலையத்திற்கு இடையிலான அனைத்து விமான சேவைகளும், நஜாஃப் ஆளுநருக்குப் பிரதமரின் அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டதாக விமான நிலைய இயக்குநர் ஹுசைன் முஹன்னா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குர்திஸ்தான் உட்பட ஈராக்கின் அனைத்து விமான நிலையங்களிலும் இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்திற்குத் தெற்கே அமைந்துள்ள புனித நகரமான நஜாஃபில் உள்ள விமான நிலையம், ஈரானிய விமானங்களுக்கான ஒரு முக்கிய மையமாகவும், ஈராக்கில் அவற்றின் முதன்மை இலக்காகவும் திகழ்கிறது.
இந்த விமான சேவைகள் முக்கியமாக ஈரானின் புனித நகரங்களுக்குச் செல்லும் ஈராக்கிய ஷியா யாத்ரீகர்களையும், அல்லது ஈராக்கில் உள்ள புனிதத் தலங்களைப் பார்வையிடும் ஈரானியர்களையும் ஏற்றிச் செல்கின்றன.
மேலும், ஈரானில் கல்வி பயிலும் ஈராக்கிய மாணவர்களுக்கும், அங்கு மருத்துவ சிகிச்சை நாடும் நோயாளிகளுக்கும் இந்த விமானங்கள் சேவை அளிக்கின்றன.
மூன்று ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த 50 வயதான ஹைதர் மன்சூர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்த மாதம் ஈரான் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பணிந்துள்ள ஈராக், தற்போது மன்சூர் போன்ற நோயாளிகளின் உயிருக்கு உலை வைத்துள்ளது.
மட்டுமின்றி, சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும் விமானப் பயணத்திற்குப் பதிலாக, பயணிகள் தற்போது தாங்கள் செல்லும் இடத்தைப் பொறுத்து குறைந்தது 12 மணிநேர தரைவழிப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஷியா பெரும்பான்மை கொண்ட நாடுகளான ஈராக் மற்றும் அதன் அண்டை நாடான ஈரான் ஆகியவற்றுக்கு இடையிலான பிணைப்பு மிகவும் ஆழமானது; இது மதம் மற்றும் அரசியல் ஆகிய இரண்டாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈராக்கும் இணைந்துள்ளது
ஈரானிய விமான நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நடவடிக்கையை அமுல்படுத்துவதில் இஸ்ரேல் ஆதரவு ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளுடன் ஈராக்கும் இணைந்துள்ளது.
தரைவழிப் போக்குவரத்து வசதிகள் இருந்தபோதிலும், ஈரானிய விமான நிறுவனங்களுக்கு ஈராக் தொடர்ந்து ஒரு முக்கிய இடமாகவே உள்ளது; குறிப்பாக, பிப்ரவரியில் மத்திய கிழக்குப் போர் தொடங்கியபோது ஈராக் விமான நிறுவனங்கள் ஈரானுக்கான விமானச் சேவைகளை நிறுத்திய பிறகு இந்நிலை நீடிக்கிறது.

நஜஃப் விமான நிலையத்தில் உள்ள ஈரானிய விமான நிறுவனத்தின் ஈராக்கிய ஊழியர் ஒருவர் கூறுகையில், ஈரானிய விமான நிறுவனங்கள் வழக்கமாக நாளொன்றுக்குக் குறைந்தது 20 விமானங்களை இயக்குகின்றன;
ஆனால் சேவை இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று பிற இடங்களுக்கு நான்கு விமானங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.