ஹார்முஸ் நீரிணையில் ஈராக்கின் எண்ணெய் கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி: ஈரான் அறிவிப்பு
Iran grants permission for Iraqi oil tankers: ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல பல ஈராக்கிய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி.
பல்வேறு வழிகள் மூலம் ஈராக் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அந்த நாட்டின் பல எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.

குறித்த தகவலை ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஈராக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, ஈராக்கிய எண்ணெய் கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி பெறுவது பாக்தாத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது என்றும் IRNA குறிப்பிட்டுள்ளது.
சமீப நாட்களில் ஈராக்கிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் வழிவகை செய்துள்ளதாகவும், ஹார்முஸ் வழியாக ஈராக்கிய எண்ணெயை ஏற்றுமதி செய்வது குறித்து பாக்தாத் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஈராக்கிய ஜனாதிபதி நிசார் அமேதி சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, பாக்தாத் உரையாடல் கொள்கை மாநாட்டில் பேசிய அவர், இந்த விவகாரம் சிக்கலானதாகவே நீடிக்கிறது என்றும் கூறிப்பிட்டிருந்தார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கையை அடுத்து ஈரான் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியதால், மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈராக்கும் ஒன்றாகும்.

நீரிணையில் கப்பல் போக்குவரத்து போருக்கு முந்தைய நிலைகளை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளது, மேலும் அப்பகுதியில் கப்பல்கள் தொடர்ந்து தாக்குதல்களை எதிர்கொள்கின்றன.
ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு ஈராக் ஒரு நாளைக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்து வந்தது.
இந்த நிலையில், துருக்கியின் செஹான் துறைமுகம் வழியாக தனது ஏற்றுமதியை விரிவுபடுத்தவும், சிரியாவின் பனியஸ் துறைமுகம் மற்றும் ஜோர்டானின் அகாபா துறைமுகம் வழியாக எண்ணெய் ஏற்றுமதியைத் தொடங்கவும் பாக்தாத் முயற்சிகள் முன்னெடுத்து வருகிறது என்று பிரதமர் அலி அல்-ஜைதி வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |