ஓ.பன்னீர்செல்வத்தின் MLA பதவி பறிபோக வாய்ப்புள்ளதா? சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன
தற்போது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதால், அவரது பதவிக்கு சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுயேட்சையாக போட்டி
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜகவில் சீட் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் தனது பலத்தை நிரூபிக்க ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தற்போது எம்எல்ஏவாக இருந்துகொண்டு லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டால், அவரது எம்எல்ஏ பதவி பறிபோக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
அதாவது ஒரு சின்னத்தில் இருந்து வெற்றி பெற்று பின்னர் சுயேட்சையாக போட்டியிட்டால் அவர் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து பதவி பறிக்கப்படும். இதனால், ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
MLA பதவிக்கு ஆபத்து
ஆனால், தற்போது அதிமுக உறுப்பினராக கூட ஓ.பன்னீர்செல்வம் இல்லாததால் அவரது எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதாவது, அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதால் அவர் தற்போது சுயேட்சை உறுப்பினராக தான் இருக்கிறார்.
அதனால், ஒரு சுயேட்சை உறுப்பினர், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவது என்பது கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி தடை ஆகாது.
அவர், வேறு ஒரு சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே எம்எல்ஏ பதவியை இழக்க நேரிடும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் அல்லது கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டால் அவரது பதவியை நீக்கம் செய்ய முடியும்.
ஆனால், தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை செல்லாது எனக் கூறி அவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த காரணத்தினால் தான் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் வெற்றி பெற்றால் அவராகவே எம்எல்ஏ பதவியை துறந்துவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |