Omicron குறித்து பிரித்தானியா கூறுவது உண்மையா அல்லது தென்னாப்பிரிக்கா கூறுவது உண்மையா?
ஒரு பக்கம் பிரித்தானியா முதலான நாடுகள் Omicron வேகமாக பரவி வருகிறது என்கிறார்கள்...
மறுபக்கம் தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் Omicron தீவிரம் குறைந்தது என்கிறார்கள்...
இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்லி மக்கள் குழம்பிப்போயிருந்த நிலையில், Omicron வைரஸ் மிக வேகமாக பரவுவது ஏன், தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பது ஏன்? என்ற இரண்டு கேள்விகளுக்குமே பதிலைக் கண்டுபிடித்துள்ளார்கள் அறிவியலாளர்கள்.
அதாவது, Omicron வகை மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், மனிதனின் சுவாசப்பாதையில் (airways or bronchus) நுழைந்ததும், டெல்டா வைரஸை விட 70 மடங்கு வேகமாக இனப்பெருக்கம் (replicates) செய்கிறதாம். அதனால்தான், அது வேகமாக பரவுகிறது.
அதே நேரத்தில், சுவாசப்பாதையிலிருந்து நுரையீரலுக்கு நுழைந்ததும், அதே Omicron வைரஸ் தடுமாறுகிறதாம். அதாவது மற்ற மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களை விட 10 மடங்கு மெதுவாகத்தான் Omicron வைரஸால் நுரையீரலில் இனப்பெருக்கம் செய்ய முடிகிறது என ஹொங்ஹொங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அப்படிப் பார்த்தால் பிரித்தானியர்கள் சொல்வதும் உண்மைதான், தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் சொல்வதும் உண்மைதான். அதாவது வேகமாக பரவும் Omicron வைரஸ், அதே நேரத்தில், மிதமான நோய்த்தொற்றையே உருவாக்குகிறது.
அதாவது, Omicron வைரஸ், நோயாளியின் சுவாசப்பாதையில் வேகமாக இனப்பெருக்கம் செய்து எண்ணிக்கையில் அதிகரிப்பதால், நோயாளியின் தொண்டை அருகில் அதிக எண்ணிக்கையிலான வைரஸ் இருக்கும். ஆகவே, அவரிடமிருந்து அதிகமானோருக்கு அது வேகமாக பரவும். அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் நுரையீரலில் மெதுவாகவே இனப்பெருக்கம் செய்வதால், அவரை மோசமாக நோய்வாய்ப்படச் செய்வதில்லை.
அதே நேரத்தில், தனிப்பட்ட நபரைப் பொருத்தவரை இது ஆறுதலளிக்கும் செய்தியாக தோன்றினாலும், ஒரு கூட்டத்தை எடுத்துக்கொண்டால் (population level), Omicron வைரஸ் வேகமாக பரவுவதால், அதிகம் பேரை பாதித்து, அதிக அளவில் தீவிரத் தொற்றையும் மரணத்தையும் உருவாக்க வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார் ஹொங்ஹொங் பல்கலைக்கழக பொது சுகாதார நிபுணரான Dr Michael Chan Chi-wai என்பவர்.