செயற்கை இனிப்பூட்டிகளால் புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளதா: பிரான்ஸ் அறிவியலாளர்களின் ஆய்வு முடிவுகள்
அதிக சர்க்கரை உடலுக்கு கேடு என்பதை நம்மில் பலர் அறிவோம்...
அதே போல சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்துவது குறித்தும் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
இந்நிலையில், செயற்கை இனிப்பூட்டிகளால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் ஒரு நீண்ட ஆய்வு பிரான்சில் மேற்கொள்ளப்பட்டது.
பிரெஞ்சு ஆய்வாளர்கள் மேற்கொண்ட அந்த ஆய்வின் முடிவுகள், செயற்கை இனிப்பூட்டிகளை உணவில் சேர்த்துக்கொள்வதால் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளன.
இந்த ஆய்வில் 100,000க்கு அதிகமான தன்னார்வலர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் நலன் ஆகியவை, பத்து ஆண்டுகளுக்கு கண்காணிக்கப்பட்டன.
அந்த ஆய்வின் முடிவில், அதிக அளவில் செயற்கை இனிப்பூட்டிகளை எடுத்துக்கொண்டவர்கள், குறிப்பாக aspartame மற்றும் acesulfame-K என்னும் இனிப்பூட்டிகளை எடுத்துக்கொண்டவர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளதாகவும், குறிப்பாக மார்பக மற்றும் உடல் பருமன் தொடர்பான புற்றுநோய்கள் உருவாகும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், இந்த இனிப்பூட்டிகளில் சில பெரும்பாலான குளிர்பானங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான்.
ஆகவே, தங்கள் ஆய்வு, செயற்கை இனிப்பூட்டிகளால் புற்றுநோய் உருவாகும் என தெரிவிக்கவில்லை என்றும், அது தொடர்பில் மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்கள் அந்த பிரான்ஸ் ஆய்வாளர்கள்.