வெளிநாட்டில் இறந்த தமிழரை இந்து முறைப்படி தகனம் செய்த இஸ்லாமியர்கள்: உச்சம் தொட்ட மனிதாபிமானம்
துபாயில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த அருணா தங்கப்பா (58) என்ற நபரின் சடலத்தை இந்து முறைப்படி இஸ்லாமிய நண்பர்கள் தகனம் செய்த நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அருணா தங்கப்பா (58) என்ற நபர் வேலை காரணமாக ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாயில் வசித்து வந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 15 திகதி மாரடைப்பு காரணமாக அவர் உயிர் இழந்த நிலையில் அவருடைய நண்பர்கள் இந்திய துணை தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, வேலூரில் உள்ள அவரது சகோதரர் அன்புக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
ஆனால் தனது சகோதரர் அருணா தங்கப்பா ஏற்கனவே விவாகரத்து பெற்றவர் என்பதால் அவரை துபாயிலேயே தகனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இதற்கான ஆவணங்களை பெற்றுத்தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் கடந்த 6 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது உடல் இந்து சமுதாய முறைப்படி இறுதி சடங்குகள் செய்து அங்குள்ள ஜெபல் அலி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது .
இந்த பணியில் சமூக ஆர்வலர்கள் முதுவை ஹிதாயத், லெப்பைக்குடிக்காடு சையது சலீம் பாஷா, திருவாரூர் நிஜாம், சென்னை வெங்கட், மதுரை பாலாஜி, சென்னை பாலாஜி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இவர்களது இந்த செயல் மனிதாபிமானத்தை எடுத்துரைப்பதாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.