அதிரடியாக நுழைந்த இஸ்ரேல் சிறப்பு ராணுவ படை: 250 பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்பு
ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டு இருந்த 250 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை இஸ்ரேல் கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட இஸ்ரேலிய மக்கள்
கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடர்ந்த பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர், வெளிநாட்டினர் உள்பட பல இஸ்ரேலிய மக்களை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கடத்தி சென்றனர்.
இதற்கிடையில் இஸ்ரேலின் 120 குடும்பங்கள் தங்களது உறவினர்களை காணவில்லை என்று உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
அதனடிப்படையில் காணாமல் போனவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.
இதனை தொடர்ந்து இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் மற்றும் நேற்று காசாவின் மீதான வான் தாக்குதலில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 13 பிணைக் கைதிகள் இறந்துவிட்டதாக ஹமாஸ் அமைப்பினர் அறிவித்தனர்.
250 பிணைக் கைதிகள் மீட்பு
இந்நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டு இருந்த 250 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை இஸ்ரேல் கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவின் தெற்கு சுஃபா சோதனை சாவடி பகுதியில் நேற்று இஸ்ரேல் கடற்படையின் புளோடில்லா 13 என்ற சிறப்புப் படை வீரர்கள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
அங்கிருந்த கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த சுமார் 60 ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய கடற்படை வீரர்கள் சுற்றி வளைத்து அனைவரையும் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் கட்டிடம் முழுவதும் சோதனை நடத்திய இஸ்ரேலிய வீரர்கள், அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 250 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |