மேற்கு கரையில் ஐரோப்பிய தூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: 10 பேரை கைது செய்த இஸ்ரேல்
Israel arrested 10 suspects for attacks on foreign diplomats: பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் ஐரோப்பிய தூதர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளது.
ஐரோப்பிய தூதர்கள் மீது தாக்குதல்
கடந்த வார இறுதியில் மேற்குக் கரை பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாலஸ்தீன கிராமமான தைபே(Taybeh) அருகே ஆலிவ் பழங்களை அறுவடை செய்து கொண்டிருந்த பாலஸ்தீன மக்கள், ஐரோப்பிய தூதர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டு மேயர் பெர்னார்ட் போடோ ஆகியோர் மீது முகமூடி அணிந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பெல்ஜியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் மக்சிம் ப்ரெவோட் வழங்கிய தகவல்படி, பிரான்ஸ், பெல்ஜியம், போலந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் மற்றும் கத்தோலிக்க பிரதிநிதிகள் மீது முகமூடி அணிந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து பெல்ஜியம், போலந்து மற்றும் பாலஸ்தீன நாடுகளின் அரசு பிரதிநிதிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து இஸ்ரேலிய அரசு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது.

10 பேரை கைது செய்த இஸ்ரேல்
இந்நிலையில் ஐரோப்பிய தூதர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய 10 பேரை இஸ்ரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்த இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு முகமையான ஷின் பெட்(Shin Bet) இந்த விசாரணையில் இணைந்துள்ளது.