யேமனின் துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்
யேமனில் உள்ள மூன்று துறைமுகங்கள் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையத்தின் ஹவுதி இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இராணுவம் விளக்கம்
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஏமன் மீதான முதல் இஸ்ரேலிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், ஹொடைடா, ராஸ் இசா மற்றும் சாலிஃப் துறைமுகங்கள் மற்றும் ராஸ் குவாண்டிப் மின் உற்பத்தி நிலையம் மீதான தாக்குதல்கள் நடந்ததாக இராணுவம் விளக்கமளித்துள்ளது.
அக்டோபர் 2023 ல் காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் ஆதரவு ஹவுதிகள் இஸ்ரேல் மீதும், செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி, உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்துள்ளனர்.
தங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல்களுக்கு எதிரான தங்களின் பதில் என்றும் குறிப்பிட்டனர்.
இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட டசின் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. இஸ்ரேல் தொடர்ச்சியான பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
நகரம் இருளில்
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹவுத்திகளால் கைப்பற்றப்பட்ட ராஸ் இசா துறைமுகத்தில் உள்ள கேலக்ஸி லீடர் கப்பலையும் இஸ்ரேல் தாக்கியது. ஹவுதி படைகள் கப்பலில் ஒரு ரேடார் அமைப்பை நிறுவி, சர்வதேச கடல்சார் இடத்தில் கப்பல்களைக் கண்காணிக்க அதைப் பயன்படுத்துகின்றன.
செங்கடல் துறைமுக நகரமான ஹொடைடா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் பிரதான மின் நிலையத்தை சேதப்படுத்தியுள்ளதால், நகரம் இருளில் மூழ்கியது. அமெரிக்க ஆதரவு இஸ்ரேல், இப்பகுதியில் ஈரானின் மற்ற நட்பு நாடுகளான லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸைக் கடுமையாக தாக்கியுள்ளது.
தற்போது ஹவுதிகளும் ஈராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்களும் மட்டுமே இஸ்ரேலின் முழுவீச்சிலான தாக்குதலில் இருந்து தப்பி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |