காஸாவில் டாங்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் நிறைவடைந்ததாக இஸ்ரேல்
Israel’s military said it had concluded a tank raid: இஸ்ரேலிய இராணுவம், டாங்கிகள் மூலம் நடத்திய தாக்குதல் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்ததாகத் தெரிவித்துள்ளது.
மத்திய காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் அமைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுரங்கப்பாதையை தகர்ப்பதற்காக நடத்தப்பட்ட டாங்கிகளாலானத் தாக்குதலை முடித்துவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனியக் குடும்பங்கள்
ஒரு வருடத்திற்கும் மேலாக பெரும் சண்டைகளை நிறுத்திய போர் நிறுத்தத்திற்குப் பிறகு, மஞ்சள் போர் நிறுத்தக் கோட்டைக் கடந்து இஸ்ரேல் மேற்கொண்ட மிகவும் பரபரப்பான தரைவழி ஊடுருவல் இதுவாகும்.

சமூக ஊடகத்தில் காஸா மக்களுக்கு செய்தியைப் பதிவிட்ட இராணுவம், அப்பகுதியில் ஹமாஸின் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கையைத் தங்கள் படைகள் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாகவும், பிரதான வடக்கு-தெற்கு சலாஹுதீன் சாலை போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இராணுவ டாங்கிகள் சாலையில் வலம் வந்ததால், ஒரு நாள் முன்னதாகவே பாலஸ்தீனியக் குடும்பங்கள் தப்பி ஓடியிருந்தன. அக்டோபர் 2025 போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இஸ்ரேலிய மற்றும் ஹமாஸ் கட்டுப்பாட்டுக்கு இடையேயான எல்லைக் கோட்டிற்கு அப்பால் ஆழமாக ஒரு தாக்குதலை இஸ்ரேலியப் படைகள் பகிரங்கமாக அறிவித்தது இதுவே முதல் முறை.
அந்தப் பாதை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்; இதனால் வாகனங்களும் மக்களும் அந்தப் பக்கமே செல்லாமல் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
புதன்கிழமை அன்று, மஞ்சள் கோட்டிற்கு மேற்கே உள்ள, தங்கள் படைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சுரங்கப்பாதையை அகற்றும் நோக்கில், துருப்புக்களும் உளவுத்துறை அதிகாரிகளும் ஒரு இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.

அப்பகுதியைத் தவிர்க்குமாறு காஸா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் கூறியது. இந்த நிலையில், மீண்டும் ஒரு ராணுவத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில்,
பாலஸ்தீனக் குடும்பங்கள், அவர்களில் பெரும்பாலானோர் 2023-ல் போர் தொடங்கியதிலிருந்து பலமுறை இடம்பெயர்ந்தவர்கள், தங்கள் உடைமைகளை மிதிவண்டிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் மீது ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.
ஹமாஸ் நிர்வகிக்கும் காஸா அரசாங்கத்தின் ஊடக அலுவலகம், புதன்கிழமை அன்று அந்தப் பகுதியிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 6,000 என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் முயற்சி
ஹமாஸ் அமைப்பு அண்மைக் காலமாகக் குழுவை மீண்டும் ஒருங்கிணைத்து, ஆயுதங்களைச் சேகரித்து வருவதாகக் கூறும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அக்டோபர் 2025-ல் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சிப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும், அமெரிக்க ஆதரவு பெற்ற அமைப்பு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் ஆகிய இரு தரப்பினருமே மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
காஸாவின் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களில் ஏறக்குறைய அனைவரும், தற்போது அந்த கடற்கரைப் பகுதியின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பெரும்பாலும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள தற்காலிக கூடாரங்களிலோ அல்லது சேதமடைந்த கட்டிடங்களிலோ வசிக்கின்றனர். இஸ்ரேலியப் படைகள், தாங்கள் தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்திருக்கும் காஸாவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதியை பெருமளவில் தரைமட்டமாக்கியதுடன், அங்கிருந்து மக்களை வெளியேற்றியும் விட்டன.
காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 1,600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அதேவேளையில், இஸ்ரேலிய ராணுவம் 5 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.