காஸாவை அடுத்து இன்னொரு பகுதிக்கு குறிவைத்துள்ள இஸ்ரேல்: தப்பியோடும் மக்கள்
மேற்குக் கரை நகரத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் ஜெனின் அகதிகள் முகாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இரும்புச் சுவர்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி முழுவதும் தீவிரமடைந்து வரும் அடக்குமுறைக்கு மத்தியில் குறித்த தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலானவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக 65 வயது முதியவர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
அவர்கள் கொண்டு வந்த 12 பெரிய புல்டோசர்களை நான் என் கண்களால் பார்த்தேன்: அவர்கள் ஒரு முழு நகரத்தையும் அழிக்க முடிவெடுத்துள்ளார்கள் என்பதால் அவ்வாறு செய்திருக்கலாம் என்றார்.
காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு மேற்குக் கரையில் தொடங்கிய சமீபத்திய நடவடிக்கைகளுக்கு இரும்புச் சுவர் என்ற குறியீட்டுப் பெயரில் இஸ்ரேலிய அதிகாரிகள் பெயரிட்டுள்ளனர்.
ஜெனினில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் பாலஸ்தீன போராளிகளை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவே கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை போராளிகள் மீண்டும் ஒன்றுகூடுவதையும் இஸ்ரேலிய பொதுமக்களைத் தாக்குவதையும் தடுக்கும் நோக்கம் கொண்டது என குறிப்பிட்டுள்ளனர்.
ஜெனின் ஆளுநர், கமால் அபு அல்-ரப் தெரிவிக்கையில், முகாமில் வசித்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள் முகாமை காலி செய்ய இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வெளியேறத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக் கரை முழுவதும்
இஸ்ரேலியப் படைகள் அகதிகள் முகாமில் சோதனையிட்டதைத் தொடர்ந்து 2,000 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக இஸ்ரேலிய வானொலி தகவல் வெளியிட்டுள்ளது. மட்டுமின்றி, ஜெனின் மீதான தாக்குதல் சிறிது காலம் தொடரும் என்று இராணுவ வட்டாரங்கள் சுட்டிக்காட்டியதை மேற்கோள் காட்டியுள்ளது.
இதனிடையே, மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலியப் படைகள் தங்கள் பிடியை மேலும் இறுக்கி, ஜெரிகோவிலிருந்து ரமல்லா வரையிலான பெரிய நகரங்களுக்கு வெளியே கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளதாக செய்தி நிறுவனம் வஃபா தெரிவித்துள்ளது.
மேலும், ஜெனின் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர், இதில் ட்ரோன்கள், விமானங்கள் மற்றும் பிற கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
முகாமுக்கு அருகிலுள்ள பொது மருத்துவமனையின் பல மருத்துவர்கள், துப்பாக்கி சுடும் வீரர்களால் குறிவைக்கப்பட்டதை அடுத்து காயமடைந்ததாகக் கூறினர்.
இந்த நிலையில், நகரின் மையப்பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து தப்பிச் சென்ற கிட்டத்தட்ட 650 பேருக்கு அதன் ஆம்புலன்ஸ்கள் உதவியதாக பாலஸ்தீனிய செம்பிறை அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |