காஸா மக்களுக்கு கடைசி எச்சரிக்கை... தரைவழி தாக்குதல்களை அறிவித்த இஸ்ரேல்
காஸாவில் மீண்டும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்துள்ளதுடன் பாலஸ்தீன பிராந்திய மக்களுக்கு கடைசி எச்சரிக்கை இதுவென குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம்
பணயக்கைதிகளை விடுவிக்கவும் அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் படைகளை வெளியேற்றுமாறும் இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது. ஜனவரியில் போர் நிறுத்தம் தொடங்கியதன் பின்னர் இந்த வாரம் இஸ்ரேலியப் படைகள் மிக மோசமான வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
சிறார்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், மத்திய மற்றும் தெற்கு காஸா பகுதியில் பாதுகாப்பு சுற்றளவை விரிவுபடுத்தவும், வடக்கு மற்றும் தெற்கு இடையே ஒரு பகுதி இடையகத்தை உருவாக்கவும் இலக்கு வைக்கப்பட்ட தரைவழி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு அரசாங்கங்கள் பல போர்நிறுத்தத்தைக் காக்க அழைப்பு விடுத்த போதிலும், இஸ்ரேல் தனது புதிய குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்தது. மட்டுமின்றி, போர் மண்டலங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறுமாறு பொதுமக்களை இஸ்ரேல் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, சிறு குழந்தைகளுடன் கூடிய குடும்பங்கள் வடக்கு காஸாவில் இருந்து மேலும் தெற்கே உள்ள பகுதிகளுக்கு தப்பிச் சென்றன.
இதனிடையே, கடந்த 2007 முதல் ஹமாஸ் படைகளின் ஆட்சியின் கீழ் உள்ள காஸா மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள காணொளி அறிக்கை ஒன்றில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இது கடைசி எச்சரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் விடுத்த மிரட்டல்
அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு, பணயக்கைதிகளை திருப்பி அனுப்புங்கள், ஹமாஸை அகற்றுங்கள், உங்களுக்கு வேறு வழிகள் திறக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விரும்புவோருக்கு உலகின் எந்தத் திசையிலும் சென்று உயிர் வாழலாம் என்றார். இந்த மாத தொடக்கத்தில், காஸா மக்களுக்கு எதிராக ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த மிரட்டலையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படைகள் தவறினால் மரணம் உறுதி என்றே ட்ரம்ப் மிரட்டியிருந்தார். தற்போது இஸ்ரேல் முன்னெடுத்த கொலைவெறித் தாக்குதலுக்கு அமெரிக்காவின் ஒப்புதல் இருந்ததாகவே இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தற்போது ஹமாஸ் படைகளிடம் 58 பணயக்கைதிகள் எஞ்சியுள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |