இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 143 பேர் உயிரிழப்பு - காசாவில் பலி எண்ணிக்கை 53,000 ஆக உயர்வு
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 53,000 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் வான்படை, கடந்த புதன்கிழமை காஸாவின் கான்யூனிஸ் பகுதியில் நடத்திய ஷெல் தாக்குதலில் 57 பேர் ஒரே இரவில் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கான் யூனிஸில் செயல்பட்டு வந்த ஒரே மருத்துவமனையான புற்றுநோய் மருத்துவமனையும் சேதமடைந்துள்ளதால் அதன் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வியாழக்கிழமை வடக்குப் பகுதியில், காசா நகரம் மற்றும் ஜபாலியாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில், பெண்கள், குழந்தைகள் உட்பட 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவின் அல் ஃபகூரா பகுதியில் உள்ள அல் தவ்பா சுகாதார மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53,000 த்தை கடந்துள்ளதாகவும், 1,19,998 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலை விட்டுவிட்டு, மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சூழலில், ராணுவ நடவடிக்கையை தீவிரபடுத்தி, ஹமாஸை ஒழிப்பதே தனது இலக்கு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |