பத்திரிகையாளர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: லெபனான் செய்தியாளர் உயிரிழப்பு
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனான் செய்தியாளர் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் லெபனான் இடையே 10 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தமானது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தெற்கு லெபனானில் நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு பத்திரிகையாளர் அமல் கலீல் கொல்லப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் கலீலும், சுயாதீன புகைப்பட கலைஞர் ஜெய்னப் ஃபராஜூம் இருவரும் அல்-தய்ரி நகருக்கு அருகே காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்த போது, இஸ்ரேலிய படைகள் அவர்களுக்கு முன்பு சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் அருகில் உள்ள கட்டிடத்தில் மறைந்து கொண்ட நிலையில், அந்த கட்டிடம் மீதும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பத்திரிகையாளர் அமல் கலீல் கொல்லப்பட்டதோடு, புகைப்பட கலைஞர் ஜெய்னப் ஃபராஜூம் படுகாயமடைந்துள்ளார்.
இந்த தகவலை மூத்த லெபனான் இராணுவ அதிகாரியும், அல் அக்பர் செய்தித்தாளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் பதில்
பத்திரிகையாளர் கலீல் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேலிய ராணுவம் எந்தவொரு உடனடி பதிலையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் காயமடைந்து இருப்பதாக தகவல் கிடைத்து இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
43 வயதான பத்திரிகையாளர் கலீலின் மரணத்தை தொடர்ந்து புதன்கிழமை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |