ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த நெதன்யாகு... லெபனான் மீது மீண்டும் தாக்குதல்
லெபனானில் 300க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த தாக்குதல்களுக்குப் பிறகும், ஹிஸ்புல்லா மீது முழு பலத்துடன் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேலியப் பிரதமர் சூளுரைத்துள்ளார்.
புதிய தாக்குதல்
லெபனானில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், இஸ்ரேல் இராணுவம் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஹிஸ்புல்லா படைகள் மீது முழு பலத்துடன் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

லெபனான் மீதானத் தாக்குதல்களை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே, இஸ்ரேல் இராணுவம் புதிய தாக்குதல்களைத் துவங்கியுள்ளது.
ஆனால், இஸ்ரேலும் லெபனானும் அடுத்த வாரம் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தும் என வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளிவிவகார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதை அடுத்து, லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு நெதன்யாகு தனது அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இருப்பினும், அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலோ லெபனானோ பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை.
எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடங்குவதற்கு முன்பு போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்று லெபனான் அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.
செவ்வாய்க்கிழமை இரவு ஈரான் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலிய குண்டுவீச்சில் 300க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர்.
வெளிப்படையாக ஹிஸ்புல்லாவின் இலக்குகளைக் குறிவைத்ததாகக் கூறப்பட்ட இந்தத் தாக்குதலில், அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களும் அடங்கும்.

மீண்டும் ஸ்தம்பிக்கும்
இது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிற சர்வதேச மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து கடும் கண்டனத்திற்கு இலக்கானது. லெபனான் மீதான இஸ்ரேலின் மூர்க்கமான தாக்குதல், பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுடன் தொடங்கிய ஈரான் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கைகளைத் தகர்க்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
மட்டுமின்றி, போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஸ்தம்பிக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

மேலும், இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து குண்டுவீசும் வரை பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றவை என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் கூறியுள்ளார்.
இதனால், சனிக்கிழமை பாகிஸ்தானில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் இஸ்ரேல் காரணமாக சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஈரான் லெபனான் மக்களைக் கைவிடாது என்று ஜனாதிபதி பெஷெஷ்கியன் உறுதியளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |