மேற்கு கரையில் ஐரோப்பிய தூதர்கள் மீது தாக்குதல்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் அத்துமீறல்
Israel masked settlers attacks EU diplomats in West Bank: மேற்கு கரை பகுதியில் ஐரோப்பிய நாட்டு தூதர்கள் மற்றும் பிரான்ஸ் மேயர் மீது இஸ்ரேலிய குடியேற்பாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய தூதர்கள் மீது தாக்குதல்
மேற்குக் கரை பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாலஸ்தீன கிராமமான தைபே(Taybeh) அருகே ஆலிவ் பழங்களை அறுவடை செய்து கொண்டிருந்த பாலஸ்தீன மக்கள், ஐரோப்பிய தூதர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டு மேயர் பெர்னார்ட் போடோ ஆகியோர் மீது முகமூடி அணிந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் மக்சிம் ப்ரெவோட் வழங்கிய தகவல்படி, பிரான்ஸ், பெல்ஜியம், போலந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் மற்றும் கத்தோலிக்க பிரதிநிதிகள் மீது முகமூடி அணிந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாலஸ்தீன விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற வடக்கு பிரான்சின் அல்னாய்-ஏமரிஸ் நகர மேயர் பெர்னார்ட் போடோ ஆகியோரை முகமூடி ஆக்கிரமிப்பாளர்கள் கீழே தள்ளி விட்டுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலின் போது பெல்ஜிய தூதரகத்தின் வாகனமும் பலமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
வலுக்கும் சர்வதேச அளவிலான கண்டனம்
இந்த தாக்குதலை தொடர்ந்து பெல்ஜியம், போலந்து மற்றும் பாலஸ்தீன நாடுகளின் அரசு பிரதிநிதிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
தூதரக பணிகள், பத்திரிகையாளர்கள், விவசாயிகள் மீது எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அதிகரித்த சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து, இஸ்ரேலிய அரசு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விஜயம் தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.