பயங்கரவாதி என கைதானால் இனி... பாலஸ்தீனியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேல்
பயங்கரவாதத்திற்கு மரண தண்டனை விதிக்கும் பிரேரணையின் முதல் சுற்று விவாதத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவு செய்துள்ளது.
மரண தண்டனை
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியும், நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான இடாமர் பென்-க்விர் முன்மொழிந்த தண்டனைச் சட்டத் திருத்தமானது, 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட்டில் 16 பேர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க, அரசாங்கத்தால் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டது.

வெளியான வரைவு உரையின்படி, இனவெறி நோக்கங்களுடன் இஸ்ரேலியர்களைக் கொல்பவர்களுக்கும், இஸ்ரேல் அரசுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் மற்றும், அதன் நிலத்தில் யூத மக்களின் மறுமலர்ச்சிக்குஎதிராகவும் செயல்படுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
ஆனால், நெதன்யாகு அரசாங்கத்தின் நோக்கம் என்பது யூதர்களைக் கொல்லும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமே மரண தண்டனை பொருந்தும் என்றும், யூத மக்களின் தீவிர வலதுசாரிகள் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தும் தாக்குதல்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என விளக்கமளிப்பதாக உள்ளது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இஸ்ரேல் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை அம்னஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை ஒன்றில் கடுமையாக கண்டித்துள்ளது.

ஆபத்தான போக்கு
மேலும், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மட்டுமே மரண தண்டனையை நீதிமன்றங்கள் விதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் ஒரு பிரேரணையை முதல் சுற்றிலேயே 39 இஸ்ரேலிய நெசெட் உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் அங்கீகரித்துள்ளனர் என்பது, அவர்களின் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள், ஒரு ஆபத்தான போக்காகவும், இஸ்ரேலின் நிறவெறி முறைக்கும் காஸாவில் அதன் இனப்படுகொலைக்கும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதன் விளைவாகவும் உள்ளதாக மூத்த அம்னஸ்டி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இஸ்ரேல் நாடாளுமன்றம் இப்படியான பிரேரணை ஒன்றை நிராகரித்துள்ளது. தற்போதைய பிரேரணையானது இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, அதன் பின்னரே சட்டமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |