மேற்குக் கரையில் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டம்: பாலஸ்தீனம் கடும் கண்டனம்
பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரை பகுதியில் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்த இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்த திட்டம்
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை(West bank) பகுதி 1967ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இப்பகுதி தங்களுக்கு சொந்தம் என்றும் இங்குள்ள ஆக்கிரமிப்புகள் நியாயமானது என்று இஸ்ரேல் கூறி வருகிறது.
மேற்கு கரை பகுதியில் பூர்வீகமாக வசிக்கும் பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சியாக அப்பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குடியேற்றங்களை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரை பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்த இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த பகுதியில் இதற்கு முன்னதாக யூதர்கள் கட்டுமானங்கள் உருவாக்க வேண்டும் என்றால் அப்பகுதியில் உள்ள உள்ளூர் நிர்வாகம் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் ஒப்புதலை பெற வேண்டியது அவசியமானது.
ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம், இப்பகுதியில் யூதர்கள் கட்டிடங்கள் எழுப்ப இஸ்ரேலிய அதிகாரிகளின் ஒப்புதலை மட்டும் பெற்றால் போதும்.
மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள பாலஸ்தீனியர்களின் சில மத தலங்களையும் இஸ்ரேலிய அதிகாரிகள் நிர்வகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய அமைச்சர்களின் கூட்டறிக்கை
இது தொடர்பாக இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஆக்கிரமிப்பு விரிவாக்க நடைமுறை இந்த மண்ணில் எங்களின் வேர்களை வலுவாக்கும் என்றும், பாலஸ்தீன நாடு என்ற கருத்தியலை உடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மேற்குக் கரை இஸ்ரேலிய நாட்டின் இதயம் போன்றது என்றும் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனம் கண்டனம்
இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு பாலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, இது மேற்குக் கரையை இஸ்ரேலுடன் முழுமையாக இணைக்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு சர்வதேச நாடுகளும் அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |