ஐரோப்பாவில் தயாரான 5,000 பேஜர்களில்... ஹிஸ்புல்லா அமைப்பை குலைநடுங்க வைத்த இஸ்ரேல்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தும் பேஜர்கள் திடீரென்று வெடித்த விவகாரத்தில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உளவு அமைப்பான மொசாத்
ஹிஸ்புல்லா அமைப்பு இறக்குமதி செய்த 5,000 பேஜர்களில் மொசாத் வெடிப்பொருட்களை மறைத்து வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. லெபனானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இதை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
பேஜர்கள் பயன்பாடு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கூட இப்படியான ஒரு முயற்சி முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் லெபனான் முழுவதும் ஆயிரக்கணக்கான பேஜர்களை ஒரே நேரத்தில் வெடிக்க வைத்துள்ளது.
இதில் 9 பேர்கள் கொல்லப்பட்டதுடன், 3,000 பேர்கள் காயமடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் மட்டுமின்றி லெபனானுக்கான ஈரானிய தூதரும் இந்த நூதன தாக்குதலில் சிக்கியுள்ளார்.
பேஜர்கள் அனைத்தும் தைவானின் Gold Apollo என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். ஆனால், Gold Apollo நிறுவனம் தெரிவிக்கையில், ஐரோப்பிய நிறுவனம் ஒன்று தற்போது இந்த பேஜர்களை தயாரித்து வருவதகாவும், அவர்களே Gold Apollo என்ற பெயரில் சந்தைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த விவகாரத்தில் கொந்தளித்துப் போயுள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலுக்கு பதிலடி உறுதி என எச்சரித்துள்ளது. லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் நடந்த இந்த பேஜர் தாக்குதல் குறித்து இதுவரை இஸ்ரேல் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.
ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டுள்ளது
ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான இந்த திட்டமானது பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Gold Apollo என்ற நிறுவனத்திடம் இருந்து புதிதாக 5,000 பேஜர்கள் வாங்க ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் 5,000 பேஜர்களும் ஹிஸ்புல்லா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேஜர்கள் அனைத்தும் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், தைவான் நிறுவனம் சார்பில் தற்போது ஐரோப்பிய நிறுவனமே தயாரித்து சந்தைப்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பானது தங்கள் தகவல் பரிமாற்றம் கசிய வேண்டாம் என்பதாலையே பேஜர்களை பயன்படுத்தி வருகிறது. ஆனால் இஸ்ரேலின் மொசாத் அமைப்பு ஹிஸ்புல்லா வாங்கிய பேஜர்களை வெடிக்கும் வகையில் மறு உருவாக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், எவரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் இதை மொசாத் செய்துள்ளது. மொத்தம் 3,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துள்ளது. குறிப்பிட்ட ஒரு தகவல் ஒரே நேரத்தில் பகிரப்பட, அந்த பேஜர்கள் வெடித்துள்ளது.
அக்டோபர் 7ம் திகதி காஸா போர் தொடங்கியதன் பின்னர் மிகப்பெரிய பாதுகாப்பு அத்துமீறல் இதுவென்றே ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |