ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர்: யூத மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை
உக்ரைன் மீதான போர் குறித்து விவாதிப்பதற்காக இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சனிக்கிழமை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் பதற்றமானது உலகநாடுகளை பலவழிகளில் அதன் பொருளாதார நடைமுறைகளில் தொடர்ந்து பாதித்து வருகிறது. இதனால் இந்த போரை நிறுத்தக்கோரி பல நாட்டுத்தலைவர்களும் தொடர்ந்து முயன்றுவரும் நிலையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்யும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
அந்தவகையில் நேற்று(சனிக்கிழமை) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் , அந்த நாட்டின் ஜனாதிபதி புதினுடன் போர் நிலவரம் குறித்தும், போரை நிறுத்துவது குறித்தும் பேசுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.
அப்போது உக்ரைனில் உள்ள யூத இனமக்களின் பாதுகாப்பு குறித்தும், உக்ரைன் போரை நிறுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேசியதாகவும் மற்றும் ரஷ்யா ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கிரெம்ளினில் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், அந்த நாட்டின் ஜானதிபதி ஓலாஃப் ஸ்கோல்ஸ் சந்தித்து புதினுடனான தனது உரையாடலை பகிர்ந்து கொண்டதாகவும், அதன்பின் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனும் தொலைப்பேசி வாயிலாக பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடமும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் தனது பேச்சுவார்த்தை குறித்த சாராம்சத்தை விவரித்ததாக எலிசே அரண்மனையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இஸ்ரேல் பிரதமரின் இந்த சுற்றுப்பயணம் உக்ரைனில் அமைதி நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் என இஸ்ரேல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து உக்ரனுக்கு மருத்துவ உதவிகளை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளபோதிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் போரை நிறுத்தி பிரச்சைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.