ஹமாஸுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும், எங்களுக்கு அல்ல..! இஸ்ரேல் பிரதமர் காட்டம்
போரில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு உலக தலைவர்கள் ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்கு தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
உலக தலைவர்கள் கண்டனம்
இஸ்ரேல் ராணுவ படைக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே 36வது நாளாக போர் நடைபெற்று வருகிறது, இதில் 11,000 காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் நேற்று பிபிசி-க்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அளித்த பேட்டியில், பொதுமக்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்.
பொதுமக்கள் மீது குண்டு வீசுவதற்கு எந்தவொரு நீதியும் கற்பிக்க முடியாது, போர் நிறுத்தம் என்பது இஸ்ரேலுக்கு ஆதாயம் தரும்.
அதேசமயம் தற்காப்பிற்காக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை பிரான்ஸ் ஆதரிக்கிறது, ஆனால் பொதுமக்கள் கொல்லப்படுவதை பிரான்ஸ் ஏற்காது. இதனை தான் அமெரிக்கா போன்ற நாடுகளும் வலியுறுத்துவார்கள் என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு பதில்
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பதிலில், காசாவில் அப்பாவி பொதுமக்கள் அவதிபடுவதற்கு ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகள் தான் பொறுப்பு.
அவர்கள் தான் இஸ்ரேல் மீது முதலில் தாக்குதலை தொடங்கினர், மேலும் 240 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர்.
Israel-Hamas war: PM Netanyahu
ஹமாஸ் அமைப்பினர் பள்ளிகள், மருத்துவமனை, மசூதிகள் ஆகியவற்றை திட்டமிடும் மையங்களாக செயல்படுத்து வருகின்றனர், அதே போல போர் நடைபெறும் இடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை ஹமாஸ் அமைப்பினர் தடுத்து அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
எனவே உலக தலைவர்கள் எங்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாம், ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்குத் தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |