எங்கள் நாட்டின் உண்மையான நண்பர் ஜோ பைடன்! இஸ்ரேல் பிரதமர்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தங்கள் நாட்டின் மீது பாதுகாப்பில் அக்கறை கொண்டவர் என்றும், அவர் உண்மையான நண்பர் என்றும் இஸ்ரேலின் பிரதமர் நாப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், இஸ்ரேல் நாப்தலி பென்னட் அமெரிக்க பயங்கரவாத பட்டியலில் இருந்து 'ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையை (ஐ.ஆர்.ஜி.சி)' நீக்குவது குறித்து தொலைபேசியில் நேற்று கலந்துரையாடினர்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டங்களைக் குறைத்து, அமைதியான முடிவை புனித ரமலான் காலத்தில் உறுதி செய்ய வேண்டும். இது குறித்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகளுக்கு இடையே நடந்து வரும் முயற்சிகள் என்ன என்பது குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேசினர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பைடன் இஸ்ரேலின் உண்மையான நண்பர், அதன் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர். ஆகவே, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து ஐ.ஆர்.ஜி.சி-யை அவரால் நீக்க முடியாது. இந்த விவகாரத்தில், ஐ.ஆர்.ஜி.சி உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு என்பதை இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வரும் மாதங்களில் இஸ்ரேலுக்கு வர விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். பிரதமர் நாப்தலி பென்னட் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.