ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயார்: ஆனால் இந்த முறை.,காட்ஸ் எச்சரிக்கை
ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தை
அமெரிக்கா - ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட 2 வார கால அமைதி ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒருதலைபட்சமாக போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையை காரணம் காட்டி ஈரான் 2ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மறுத்து வரும் நிலையில் அமெரிக்கா போர் நிறுத்தத்தை நீட்டித்துள்ளது.

ஈரானுடன் மீண்டும் போர்
இந்நிலையில் ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய படைகள் தற்காப்பு மற்றும் தாக்குதல் தயாரிப்புகளை முடித்து விட்டதாகவும், தாக்குதலுக்கான இலக்கையும் இறுதி செய்து விட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஆட்சி தலைமை வாரிசுகளான காமேனி குடும்பத்தை முழுவதுமாக அழிக்க தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானை முழுவதுமாக இருளுக்குள் தள்ளுவதற்கும், முக்கிய எரிசக்தி மற்றும் மின்சார வசதிகளை சிதைத்து அந்த நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கும் போது இந்த முறை தாக்குதலானது வித்தியாசமாகவும், பயங்கரமானதாகவும் இருக்கும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |