பதிலடிக்கு இஸ்ரேல் முயன்றால்... முடிவு மிக மோசமாக இருக்கும்: மிரட்டல் விடுத்த ஈரான்
இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதலை முன்னெடுத்த ஈரான், முடிவு மிக மோசமாக இருக்கும் என மிரட்டல் விடுத்துள்ளது.
முடிவு மிக மோசமாக இருக்கும்
எச்சரிக்கை விடுக்கப்பட்டது போலவே ஈரான் சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. இதில் 86 சதவிகிதம் இலக்கை தாக்கியதாகவே ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஈரானின் புரட்சிகர காவலர்கள் படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மீதான தாக்குதலை தற்போது தாங்கள் முடித்துக் கொள்வதாகவும், ஆனால் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தரப்பில் இருந்து தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்றால், முடிவு மிக மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மதியத்திறேகு மேல், உள்ளூர் நேரப்படி சுமார் 7.30 மணியளவில் இஸ்ரேலின் வர்த்தக மையமான டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானின் நடவடிக்கை தொடர்பில் ஏற்கனவே அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் அமெரிக்காவின் மிரட்டலை கண்டுகொள்ளாத ஈரான், சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. தொடர்புடைய தாக்குதல் காணொளியை ஈரானிய செய்தி ஊடகங்கள் வெளியிட்டு, துணிச்சல் மிகுந்த ஈரானிய மக்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரலில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு செவ்வாயன்று இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும். டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால், இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளால் ஈரானின் மொத்த தாக்குதலும் முறியடிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஏவுகணை மட்டுமே தாக்குதலுகாக பயன்படுத்திய ஈரான், சுமார் 86 சதவிகித இலக்கையும் தாக்கியுள்ளது.
இஸ்ரேல் போர்வெறியில்
மட்டுமின்றி, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு பல ஆண்டுகளாக ஈரான் நிர்வாகமே பண உதவிகளை அளித்து வருகிறது. இந்த நிலையில், நஸ்ரல்லாவின் கொலைக்கு பழி வாங்கப்படும் என்றே ஈரான் கூறி வந்தது.
மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றிய ஈரானிய ஜனாதிபதி Masoud Pezeshkian, ஈரான் கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் போது இஸ்ரேல் போர்வெறியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், இஸ்ரேல் போன்ற குற்றவாளிகளுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பது என்பது அவர்களை மேலும் குற்றங்களைச் செய்யத் தூண்டும் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |