போர் நிறுத்தம் வாய்ப்பில்லை... அமெரிக்க - பிரான்ஸ் முன்னெடுப்பை புறந்தள்ளிய இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்படப்போவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்றே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பேச்சுக்கே இடமில்லை
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் தங்கள் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளது ஹிஸ்புல்லா படைகள்.
இதுவே ஒருகட்டத்தில் இஸ்ரேலுக்கு தலைவலியை ஏற்படுத்த, தற்போது காஸா போர் முடிவுறும் கட்டத்தை நெருங்கும் நிலையில், லெபனான் பக்கம் தமது பார்வையை திருப்பியுள்ளது இஸ்ரேல்.
கடந்த மூன்று நாட்களால் லெபனான் மீது உக்கிர தாக்குதலை முன்னெடுத்துள்ள இஸ்ரேல், தரைவழி தாக்குதலுக்கும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையிலேயே 21 நாட்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் முன்வைத்தது.
ஆனால் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற தொனியில் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், அது உண்மை இல்லை என தெரிவித்துள்ளது.
மேலும், போர் நிறுத்த ஒப்பந்தமானது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நிர்வாகங்களின் முன்னெடுப்பு என்றும், அதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை பதிலளிக்கவும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
வெற்றி பெறும் வரை
அத்துடன் மேலும் உக்கிரமாக தாக்குதலை தொடரவே பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை தொடங்கி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட லெபனான் மக்களின் எண்ணிக்கை 600 கடந்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளனர். போர் நிறுத்தம் என்பதற்கு வாய்ப்பில்லை என்றே இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பக்கத்தில் அமைச்சர் காட்ஸ் தெரிவிக்கையில், வடக்கில் போர் நிறுத்தம் என்பதற்கு வாய்ப்பில்லை. ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு எதிராக எங்களின் முழு பலத்துடன் வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்,
மற்றும் வடக்கில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்றார். இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே தொடர் சண்டை காரணமாக சுமார் 60,000 இஸ்ரேலியர்கள் வடக்கு இஸ்ரேலில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |